சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 2024 ஆம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இயந்திரத்தனமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் குண்டாஸை ரத்து செய்யக்கோரி மனுதாரர்கள் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. பின்னர், சட்டம்-ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக காவல்துறை விளக்கம் அளித்தனர்.
இதனையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 17 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து வழக்கறிஞர் அமீது இஸ்மாயில் அளித்த பேட்டியில், “வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், மனுதாரர்கள் போட்ட 17 மனுக்களையும் ஏற்றுக் கொள்வதாகவும், அவர்கள் மீது காவல் ஆணையாளர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட உத்தரவை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.” என்றார்.