சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகையிடம் விசாரிக்க காவல் துறை தவறிவிட்டது என பகுஜன் சமாஜ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்தாண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கை செம்பியம் காவல் துறையினர் நியாயமாக விசாரிக்கவில்லை என கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொது செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது, காவல் துறை தரப்பில் பதில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், “காவல் துறை நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டது. ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியே விசாரணை திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது அரசியல் கொலை இல்லை.
வழக்கில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், இம்மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என கூறப்பட்டிருந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கைது செய்யப்பட்டவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே காவல்துறை அவசர கதியில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் மேற்கொண்ட சாட்சி விசாரணையின் அடிப்படையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விசாரணை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டது” என வாதிட்டார்.
தொடர்ந்து நீதிபதி பிறப்பத்த உத்தரவில். “கொலையை நேரில் பார்த்த சாட்சியான ஆம்ஸ்ட்ராங்கின் சகோதரர் வீரமணி முன்னிலையில் கைது செய்யப்பட்டவர்களின் அடையாள அணிவகுப்பு நடத்தாதது கடும் அதிருப்தி அளிக்கிறது” என குறிப்பிட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.