சென்னை: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரலாற்றில் காலம் கடந்து நிலைத்து நிற்கும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைகளில் பங்களிப்பாற்றிய தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்களுக்கு ஆளுநர் மாளிகை சார்பில் பாராட்டு விழா சென்னை தரமணியில் உள்ள ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடத்தப்பட்டது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட முப்படைகள் பயன்படுத்தும் ஆயுதங்களின் மாதிரிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து தென்னிந்தியப் பகுதிகளின் ராணுவ லெப்டினட் ஜென்ரல் கரண்பீர் சிங் பரார், இந்திய விமான படை ஆவடி மையத்தின் கமான்டர் பிரதீப் சர்மா, இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டலத்தின் கமான்டர் தர்விந்தர் சிங் சைனி உட்பட 10 பேருக்கு ஆளுநர் ரவி விருதுகள் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியதாவது: வரலாற்றிலேயே மிக குறுகிய காலத்தில் இலக்கை துல்லியமாக எட்டி, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை சிறப்பாக மேற்கொண்டு, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தேடி தந்த முப்படைகளுக்கு நன்றி. பாகிஸ்தான் மீதான நடவடிக்கையை நிறுத்த அதன் ராணுவமே கோரிக்கை வைத்தது.
அதையேற்றுதான் ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. ஒரு போர் தொடங்கினால் எளிதில் முடியாது. அதற்கு உதாரணம், ரஷ்யா-உக்ரைன், இஸ்ரேல்-ஈரான் போர்கள் தற்போதும் தொடர்கின்றன. இதுதான் போருக்கான பொதுவான விதி. ஆபரேஷன் சிந்தூருக்கு முன் இந்தியா, ஆபரேஷன் சிந்தூருக்கு பின் இந்தியா எப்படி என்பதை உலகம் யூகித்திருக்கும். பாகிஸ்தான் ராணுவத்தின் நீட்சி தான் பயங்கரவாதம்.
அது இரண்டுமே ஒன்றுதான் என்பது இந்தமுறை தெளிவாக புரிந்துவிட்டது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேவை இருந்தும், நமது பங்கு சிந்து நதி நீரை பாகிஸ்தானுக்கு கொடுத்து வந்தோம். அதற்கு நீங்கள் ஒழுங்காக நடந்துகொள்வீர்கள் என்று நினைத்தோம். ஆனாலும், தொடர்ந்து தவறு செய்ததால் சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டது. இது மிக துணிவான நடவடிக்கையாகும்.
இந்த விவகாரம் தாக்கத்தை காண்பிக்கத் தொடங்கிவிட்டது. கொள்கை ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அவர்களுக்கு புரிய வைத்துவிட்டோம். இந்திய ராணுவத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு அளப்பரியது.
ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்பங்கள் தற்போது வரத் தொடங்கியுள்ளன. அதற்கு இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது. நம்நாட்டின் பாதுகாப்புக்கு முப்படைகள் எப்போதும் அரணாக விளங்கும். ஆப்ரேஷன் சிந்தூர் வரலாற்றில் பலநூறு ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.