விருதுநகர்: ஆபரேஷன் சிந்தூர் பணியிலிருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ராணு வீரர் சரண் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது சொந்த ஊரில் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள முத்துசாமிபுரத்தைச் சேர்ந்த ராமசாமி – வீரஓவம்மாள் தம்பதியின் மகன் சரண் (29). இந்திய ராணுவத்தில் 8 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி மனைவி பவித்ரா (24), 11 மாத பெண் குழந்தை சஸ்டிகா ஆகியோர் உள்ளனர். ஜம்மு- காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ முகாமில் 54 ஆர்.ஆர் பிரிவில் பணியாற்றி வந்தார். பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூரில் பணியாற்றினார்.
இந்நிலையில், கடந்த ஆக.22-ம் தேதி ஜம்மு – காஷ்மீரில் பணியிலிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இவரது உடல் சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் முத்துசாமிபுரத்துக்குக் கொண்டுவரப்பட்டது. நேற்று ராணுவ மரியாதையுடன் சரண் உடல் தகனம் செய்யப்பட்டது.