சென்னை: ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க பயணம் மேற்கொண்ட கனிமொழி எம்பி, நேற்று சென்னை திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
காஷ்மீர் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதலை தொடர்ந்து, இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் நடவடிக்கை எடுத்து, தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது.
அதைத்தொடர்ந்து இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்து உலக நாடுகளிடம் விளக்குவதற்காக மத்திய அரசு பல்வேறு நாடுகளுக்கு இந்திய எம்பிக்கள் அடங்கிய குழுவை அனுப்பி வைத்தது. அதில் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி எம்பி தலைமையில் ஒரு குழுவினர் ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டனர்.
திமுக மகளிர் அணி: இந்நிலையில் கனிமொழி எம்பி தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு, ஐக்கிய அரபு நாடான அபுதாபியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் திமுக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் பெருமளவு கூடி கனிமொழி எம்பிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனால் கனிமொழி விமான நிலையத்தில் இருந்து, வெளியில் வந்து காரில் ஏறுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார். இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் விமான நிலைய போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து, கனிமொழியை வெளியே அழைத்து வந்து, காரில் அனுப்பி வைத்தனர்.