வேலூர்: தமிழக விவசாயிகளிடம் இருந்து ஆந்திர மாநில மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் மாங்காய்களைக் கொள்முதல் செய்யாமல் திருப்பி அனுப்பி வருகின்றனர். இந்த பிரச்சினையில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக – ஆந்திர எல்லை கிராமமான பரதராமியில் மாங்காய்களைச் சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் – ஆந்திர எல்லை மாவட்டங்களில் இந்தாண்டு மாங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் மா விவசாயிகளுக்கான மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் எதுவும் இல்லாததால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பழ கூழ் தொழிற்சாலைகளுக்கு ஆண்டு தோறும் ஏற்றுமதி செய்து வருகின்றனர். இந்தாண்டு வேலூர் மற்றும் அதையொட்டிய சித்தூர் மாவட்டங்களில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. இதனால், வேலூர் மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தனர்.
ஆனால், வேலூர் மாவட்டத்திலிருந்து வரும் மாங்காய்களை சித்தூர் மாவட்டத்தில் உள்ள மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் வாங்க மறுத்து வருகின்றன. ஆந்திர அரசு அம்மாநில மா விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் மானியமாக வழங்குகின்றனர். மேலும், அம்மாநில விவசாயிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதால் வேலூர் மாவட்ட மாங்காய்களைப் புறக்கணிக்கின்றனர். இந்த பிரச்சினையைத் தீர்க்க வலியுறுத்தி வேலூர் மாவட்ட விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு சில நாட்களுக்கு முன்பு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளிடம் ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி ஆலோசனை நடத்தினார். ஆனால், பிரச்சினைக் குத் தீர்வு காணப்படவில்லை. கடந்த வாரம் குடியாத்தத்திலிருந்து பரதராமி வழியாக சித்தூர் செல்லும் சாலையில் மாங்காய் ஏற்றிய டிராக்டர்க ளுடன் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதுடன் பரதராமி காவல் நிலையத்தையும் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள மாம்பழ கூழ் தொழிற்சாலைகள் தமிழக மாங்காய்களைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், வரும் காலங்களில் மா விவசாயத்தையும், விவசாயிகளைக் காக்கத் தமிழக அரசு மாங்காய் டன் ஒன்றுக்கு ரூ.4 ஆயிரம் மானியம் மற்றும் மாங்காய் டன்னுக்கு ரூ.15 ஆயிரம் ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும், வேலூர் மாவட்டத்தில் மாம்பழ கூழ் தொழிற்சாலையை மீண்டும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக ஆந்திர மாநில எல்லைப் பகுதியான பரதராமியில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது, சாலையில் சுமார் ஒரு டன் மாங்காய்களைக் கொட்டியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த தகவலை அடுத்து விரைந்து சென்ற பரதராமி காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைக் கைது செய்ய முயன்றனர். அப்போது, காவல் துறையினருக்கும் விவசாயிகளுக்கும் இடையில் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, குடியாத்தம் வருவாய்க் கோட்டாட்சியர் சுபலட்சுமி, குடியாத்தம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோர் விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டு நாளில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும் என உறுதியளித் ததால் போராட்டம் முடிவுக்கு வந்தது. பரதராமியில் விவசாயிகளின் 3 மணி நேரப் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.