வேலூர்: தமிழக மாங்காய் லோடு ஏற்றிய வாகனங்களை ஆந்திர எல்லையில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்புவதால், அதிருப்தியடைந்த விவசாயிகள் பரதராமியில் சாலை மறியலில் ஈடுபட்டதுடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விவசாயம் செய்யப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரா வகை மாங்காய் அதிகளவில் உற்பத்தி செய்யப்பட்டு ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பழச்சாறு தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள 90 சதவீதம் மா விவசாயிகள் ஆந்திர மாநில பழச்சாறு தொழிற்சாலைகளை நம்பியே உள்ளனர். அதிக மகசூல் தரும் பெங்களூரா வகை மாங்காய்களை அறுவடை செய்ததும் லாரி, டிராக்டர்களில் ஏற்றி அனுப்பி வருவாய் ஈட்டி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலும் மா விவசாயம் அதிகளவில் இருப்பதால் அம்மாநில விவசாயிகளுக்கு அங்குள்ள பழச்சாறு தொழிற் சாலைகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன. இதனால், வேலூர் மாவட்ட மா விவசாயிகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பாதித்து வருகின்றனர். தற்போது, ஆந்திர மாநிலத்தில் அதிகளவில் மாங்காய் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் தமிழகத்தில் இருந்து வரும் மாங்காய்களை வாங்க அம்மாநில பழச்சாறு தொழிற்சாலைகள் மறுத்து வருகின்றன.
தமிழக – ஆந்திர எல்லையிலே மாங்காய் லோடுகளை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைக்கின்றனர். இதனால், தமிழக விவசாயிகள் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநில பழச்சாறு தொழிற்சாலைகளின் செயல்படுகளால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் தமிழக – ஆந்திர எல்லையான பரதராமியில் மாங்காய் லோடு ஏற்றிய டிராக்டர்களுடன் இன்று (வெள்ளிக்கிழமை) சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அவர்களை பரதராமி காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் அதிருப்தி அடைந்தவர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அவர்களிடம், காவல் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, “ஆந்திராவில் மா விவசாயிகளுக்கு அரசு விலை நிர்ணயம் செய்து மானியம் வழங்குவது போல் தமிழகத்திலும் விலை நிர்ணயம் செய்து மானியம் வழங்க வேண்டும். வேலூர் மாவட்ட நிர்வாகம் ஆந்திர மாநில அரசுடன் பேசி தமிழகத்தில் விளைச்சலான மாங்காய்களை வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளித்ததால்முற்றுகை போராட்டத்தை விவசாயிகள் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், பரதராமியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.