புதுச்சேரி: ஆந்திரா, தெலங்கானாவில் பெய்த கனமழையால் தவளேஸ்வரம் அணை திறக்கப்பட்டுள்ளது. இதனால், கோதாவரியில் தண்ணீர் வரத்து அதிகரித்து புதுச்சேரி பிராந்தியமான ஏனாமினுள் வெள்ளநீர் புகுந்துள்ளது.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்கள் உள்ளன. அதில் ஆந்திரத்துக்கு அருகேயுள்ள ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றையொட்டி அமைந்துள்ளது. கனமழையால் ஆந்திரம் மாநிலத்தின் அருகே உள்ள ஏனாம் பிராந்திய தவளேஸ்வரம் அணை நிரம்பியுள்ளது. தவளேஸ்வரத்தில் உள்ள சர் ஆர்தர் காட்டன் அணையில் கோதாவரி வெள்ளம் முதல் அபாய எச்சரிக்கை அளவை எட்டியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில், தடுப்பணைக்கு நீர்வரத்து 6,72,625 கன அடியை எட்டியது. அணையிலிருந்து கடலுக்கு 6,70,541 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேல் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தவேலேஸ்வரத்தில் நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. தண்ணீர் அதிகளவில் திறக்கப்பட்டுள்ளதால், ஏனாம் கோதாவரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலயோகி பாலத்தின் கீழ் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
ஞாயிறு நண்பகலில் வெள்ளநீர் ஏனாமினுள் புகுந்தது. இதனால், பல பகுதிகளில் வெள்ளக்காடானது. பல பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் ஓடுகிறது. அங்கு வெள்ளப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பொதுப்பணித்துறை ஏதும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.