புதுச்சேரி: அதிமுக பொதுச்செயலாளரைத் தவறாக ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை என்று புதுச்சேரி மாநில அதிமுக செயலர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி வழியாக சென்னை, மகாபலிபுரம், கடலூர் கிழக்கு கடற்கரை சாலை ரயில் வழித்தடம் திட்டம் என்பது புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். கடந்த ஆண்டு திட்டத்தை செயல்படுத்த முதல் கட்டமாக மத்திய அரசு சுமார் ரூ 52.13 கோடி நிதி ஒதுக்கி இருந்தது.
இந்த நிலையில் திட்டத்தை செயல்படுத்த ஆரம்ப கட்ட பணிகளைச் செய்ய மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் திட்ட நிதியை செலவு செய்யாமல் அப்படியே ரயில்வே வாரியத்திடம் தெற்கு ரயில்வே நிர்வாகம் திரும்ப ஒப்படைத்துள்ளது. எதிர்வினை அரசியல் கண்ணோட்டத்துடன் தமிழகத்தை ஆளும் திமுக அரசு ஒத்துழைக்காமல் தவிர்த்து ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் தமிழக திமுக முதல்வர் ஸ்டாலின் துரோகம் செய்துள்ளார்.
புதுச்சேரி மக்களின் நீண்ட நாள் கனவுத் திட்டத்தை சிதைந்துள்ளது. புதுச்சேரி மாநிலம் உள்ளடக்கிய இந்த நல்ல திட்டத்தைச் செயல்படுத்த முன்வராத தமிழக திமுக நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு இதில் உள்ள உண்மை நிலையைப் புதுச்சேரி அரசு உடனடியாக மத்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும்.
இதற்கான உரிய நடவடிக்கையைத் துணைநிலை ஆளுநரும், முதல்வரும் எடுக்க வேண்டும். அதிமுக பொதுச் செயலாளரைத் தவறாக ஒருமையில் பேசியது கண்டிக்கத்தக்கது. முதலில் ஆதவ் அர்ஜுனாவுக்கு நாவடக்கம் தேவை. இவ்வாறு அவர் கூறினார்.