ஆண்டிபட்டியில் திமுக எம்பி.- எம்எல்ஏ. பொது மேடையிலேயே பகிரங்கமாக சண்டையிட்டுக் கொண்டதைத் தொடர்ந்து, எம்பி.க்கு ஆதரவாக நகர் முழுவதும் பல இடங்களில் நேற்று கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சக்கம்பட்டியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கான வரவேற்பு பேனரில் எம்பி. தங்க தமிழ்ச்செல்வன் படம் இல்லாமல் இருந்தது. இதைப் பார்த்த பின்னர் மேடைக்கு வந்த எம்.பி., இதுகுறித்து அதிகாரிகளிடமும், எம்எல்ஏ. மகாராஜனிடமும் கோபத்தை வெளிப்படுத்தினார். அரசு விழாவின் விதிப்படி எம்பி.யின் படம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று காரசாரமாக பேசினார்.
இதனால் கோபத்தில் இருந்த எம்எல்ஏ. மகாராஜன், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளைத் தானே வழங்கினார். ஒரு கட்டத்தில் தங்க தமிழ்ச்செல்வன் நிவாரணத் தொகை ஆணையை வழங்க முயன்றபோது, அவரிடம் இருந்து மகாராஜன் பறித்து பயனாளிகளுக்கு வழங்கினார். இதையடுத்து, இருவருக்கும் மேடையிலேயே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருமையில் இருவரும் காரசாரமாக திட்டத் தொடங்கினர். பொதுமக்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த மோதல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், எம்எல்ஏ. மகாராஜனுக்கு கண்டனம் தெரிவித்தும், தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆதரவாகவும் நேற்று தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அதில் அச்சக முகவரி இல்லை.
இது குறித்து மகாராஜன் எம்.எல்.ஏ. தரப்பினர் ஆண்டிபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் அந்த சுவரொட்டியில் உள்ள எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது. அந்த நபர் தனக்கும். அந்த சுவரொட்டிக் கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறினார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.