சென்னை: தமிழகத்தில் கார், ஆட்டோ, பைக் டாக்ஸி கட்டணத்துக்கு புதிய கொள்கையை தமிழக அரசு அறிமுகம் செய்யவுள்ளது. தமிழகத்தில் தற்போது பயணிகள் மற்றும் வாடகை வாகனத்தினர் இடையே ஒருங்கிணைப்பாளர்களுக்கான எந்தவொரு முறையான கட்டமைப்பும் இல்லை.
குறிப்பாக, பைக் டாக்ஸிகள், தெளிவான கட்டண விதிகள், பாதுகாப்பு அம்சங்கள் அல்லது குறைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகள் என எதுவுமின்றி ஒரு சட்டபூர்வமற்ற நிலையில் இயங்கி வருகின்றன.
இந்நிலையில், தமிழகத்தில் கார், ஆட்டோ மற்றும் பைக் டாக்ஸி ஒருங்கிணைப்பாளர்களுக்கான முதல் கொள்கையை ஆகஸ்ட் மாத இறுதியில் தமிழக அரசு வெளியிடப்பட உள்ளது. இது மத்திய அரசின் மோட்டார் வாகன ஒருங்கிணைப்பாளர் வழிகாட்டுதல்களுக்கு இணங்க உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையின் மூலம் ஒருங்கிணைப்பாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பயணிகள் ஆகியோரின் நலன்கள் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
அடிப்படைக் கட்டணம்… இந்த புதிய கொள்கையில் பைக் டாக்ஸிகளுக்கான புதிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட இருக்கின்றன. அதன்படி பயணத்தின் முதல் 3 கிலோ மீட்டருக்கு மாநில அரசே அடிப்படை கட்டணத்தையும் நிர்ணயிக்கும். அதைத்தொடர்ந்து அடிப்படைக் கட்டணத்தில் தேவைக்கு ஏற்ப 50 சதவீதம் முதல் 200 சதவீதம் வரை டைனமிக் விலையை நிர்ணயிக்க அனுமதிக்கப்படும்.
இதில் சொந்த வாகனங்களை பயன்படுத்தும்போது ஓட்டுநர்களுக்கு கட்டணத்தில் குறைந்தபட்சம் 80 சதவீத பங்கு கிடைக்கும். ஒருங்கிணைப்பாளருக்கு சொந்தமான வாகனங்களில் உள்ள ஓட்டுநர்கள் 60 சதவீதம் பெறுவார்கள். நியாயமற்ற முறையில் பயணங்களை ரத்து செய்தால் அபராதமும் விதிக்கப்படும். இதையொட்டி அனைத்து டிஜிட்டல் பயணத்தளங்களுக்கும் 6 ஆண்டு காலத்துக்கு ரூ.5 லட்சம் உரிமக் கட்டணம் நிர்ணயிக்கவும் அரசு பரிசீலித்து வருகிறது.