சென்னை: ஆட்சேபனையற்ற நிலத்தில் வசிக்கும் 86 ஆயிரம் பேருக்கு மனைப்பட்டா வழங்குவது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பெல்ட் ஏரியா எனப்படும் புறநகர் பகுதிகள், தமிழகத்தில் புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்குவதில் வருமான வரம்பு உள்ளிட்ட விதிகளும் திருத்தப்பட்டுள்ளன.
சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்கள், மதுரை, நெல்லை மாநகராட்சிகள், பல்வேறு நகராட்சிகள், மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் 86,000 பேருக்கு அடுத்த 6 மாதங்களுக்குள் பட்டா வழங்க முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த பிப்.10-ம் தேதி நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களிடம் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறும்போது, சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ‘பெல்ட் ஏரியா’ என்று கூறப்படும் 32 கி.மீ. பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்து நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் பட்டா பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.
இவ்வாறு ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேர் பட்டா இன்றி குடியிருக்கின்றனர். இது முதல்வரின் கவனத்துக்கு சென்றதை அடுத்து, இவர்களுக்கு பட்டா வழங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுத்துள்ளார்.
பெல்ட் ஏரியா சட்டம் கடந்த 1962-ம் ஆண்டு வந்தது. 1962 முதல் 2025 வரை அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், பட்டா வழங்கும் பணிகளை 6 மாதங்களுக்குள் முடிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக, மாவட்ட அளவில் ஒரு குழுவும், சென்னையில் மாநில அளவில் ஒரு குழுவும் அமைத்து உடனடியாக அந்த பணிகளை தொடங்கப்படும்.
மதுரை, திருநெல்வேலி போன்ற மாநகராட்சிகளிலும் பட்டா வழங்கப்படும் குறிப்பாக, மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட தலைநகரங்களில் ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்து வரும் 57,084 பேருக்கு பட்டா வழங்கப்படும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறைச் செயலர் பி.அமுதா வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:
குறிப்பிட்ட சில வகை புறம்போக்கு நிலங்களில், 10 ஆண்டுகளுக்கு மேலாக வசிப்போருக்கு பட்டா வழங்க, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சமாக இருந்தது. இந்த வரம்பு தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனடிப்படையில் நில ஒதுக்கீட்டு வரம்புகளும் திருத்தப்பட்டுள்ளன. அதன்படி, ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் உள்ள குடும்பங்களுக்கு 3 சென்ட் நிலத்துக்கு பட்டா வழங்கப்படும். அதில் 2 சென்ட் நிலத்துக்கு கட்டணம் எதுவும் இருக்காது; மீதமுள்ள ஒரு சென்ட்டுக்கு நிலமதிப்பில் 25 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மேல் ரூ.12 லட்சத்துக்குள் இருக்கும் குடும்பங்கள் 2 சென்ட்டுக்கு நில மதிப்பில் 50 சதவீத தொகையும், ஒரு சென்ட்டுக்கு நிலமதிப்பில் 100 சதவீத தொகையையும் செலுத்த வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.12 லட்சத்துக்கு மேல் உள்ள குடும்பங்கள் 3 சென்ட்டுக்கும் நில மதிப்பில், 100 சதவீதத் தொகையை செலுத்த வேண்டும். நகர்ப் புறம், ஊரகம் இரண்டுக்கும் இந்த விதிமுறை பொருந்தும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
இதை பின்பற்றி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 532 கிராமங்களைச் சேர்ந்த 29,187 குடும்பங்கள், ஏனைய மாவட்டங்களில் 57,084 குடும்பங்கள் என தமிழகம் முழுவதும் மொத்தம் 86,071 பேருக்கு பட்டா வழங்கப்படுகிறது.