சென்னை: தமிழகத்தில் 2026 தேர்தலில் காங்கிரஸ் கட்சியினருக்கு ஆட்சி அதிகாரம் கிடைக்கும் வகையில் கூட்டணி அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரிடம் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆயத்த பணிகளை திமுக, அதிமுக ஆகிய பிரதான கட்சிகள் தொடங்கியுள்ள நிலையில், காங்கிரஸூம் ஆயத்த பணிகளை தொடங்கும் விதமாக அதன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த 2 நாட்களாக சென்னையில் முகாமட்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அகில இந்திய செயலாளர் சூரஜ் ஹெக்டே, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், கட்சி எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
அப்போது “தமிழகத்தில், மாநில கட்சிகளின் முதுகில் மாறி மாறி சவாரி செய்யாமல், சொந்த காலில் நிற்க, கட்சியை வளர்க்க, காமராஜர் ஆட்சியை மீண்டும் கொண்டுவர உங்களிடம் என்ன திட்டம் உள்ளது” என்று கிரிஷ் சோடங்கர் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.
அதற்கு பதில் அளித்த எம்எல்ஏக்கள், “ஆட்சி அதிகாரம், ஆட்சியில் பங்கு கிடைக்கும் வகையில், அதை கொடுக்கும் கட்சியுடன் 2026 தேர்தலில் கூட்டணி வைக்க வேண்டும். வரும் தேர்தலில் திமுகவிடம் அதிக இடங்களை கேட்க வேண்டும். அங்கு கிடைக்காத பட்சத்தில், தற்போது நடிகர் விஜய்யின் தவெக, வாராது வந்த மாமணியாக கிடைத்திருக்கிறது. விசிகவை மாநிலத் தலைவர் அழைத்தால் வர வாய்ப்புள்ளது.
அதன் மூலம் புதிய கூட்டணியை உருவாக்கலாம். ஏற்கெனவே விஜய் ஆட்சியில் பங்கு என்ற ‘ஆஃபர்’ கொடுத்திருக்கிறார். அதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று எம்எல்ஏக்கள் கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கட்சியின் வழக்கறிஞர் அணி, மகளிரணி, இலக்கிய அணி உள்ளிட்ட பல்வேறு அணிகளின் மாநில நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “கிராம கமிட்டியை வலுப்படுத்த அணி நிர்வாகிகள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
உங்கள் செயல்பாடுகளை வீடியோவாக பதிவு செய்து தலைமைக்கு அனுப்ப வேண்டும்” என்று கிரிஷ் சோடங்கர் அறிவுறுத்தியுள்ளார். இக்கூட்டத்தின்போதும், தவெகவுடன் கூட்டணி அமைக்கலாம் என நிர்வாகிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
தொடர்ந்து நேற்று, காலியாக உள்ள 9 மாவட்ட பொறுப்பாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், “தேர்தலுக்கு முன்பாக மாவட்ட தலைவர்களை நியமிக்க வேண்டும். கட்சியில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்கள், தகுதியானவர்கள், விருப்பம் உள்ளவர்கள் பட்டியலை வழங்க வேண்டும்” என்று கிரிஷ் சோடங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து நடைபெற்ற, சென்னை மாநகராட்சி கவுன்சிலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், மாமன்ற தலைவர் எம்.எஸ்.திரவியத்தை மாற்ற வேண்டும் என கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். அப்போது, ” தேர்தல் வரவுள்ளது. அதனால் கவுன்சிலர்கள் பொதுமக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்.
மாதந்தோறும் கூட்டங்கள் நடத்தி, மாமன்ற கூட்டத்தில் விவாதிக்கும் பொருள் குறித்து ஆலோசிக்க வேண்டும். உங்கள் பணிகளை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டும். சமூக வலைத்தளங்களை கவுன்சிலர்கள் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்” என்று கிரிஷ் சோடங்கர் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.