திருநெல்வேலி: “ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. தோல்வி பயம் காரணமாக தமிழக முதல்வர் ஊர் ஊராக சென்று வருகிறார்.” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
திருநெல்வேலி சந்திப்பு உடையார்பட்டியிலுள்ள பாஜக அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் விரோத திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்களது நோக்கம். கடந்த சட்டப் பேரவை தேர்தல் நேரத்தில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துவிட்டு, அதன் பிறகு தகுதி உள்ள பெண்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்தார். தகுதி உள்ள பெண்கள் யார் என்று இன்றுவரை தெரியவில்லை.
தற்போது சட்டப்பேரவை தேர்தல் வருவதையொட்டி மகளிர் உரிமைத் தொகை வழங்காத பெண்களுக்கு வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். ஏற்கெனவே தேர்தல் நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். ஆனால் அதற்கான தீர்வு கிடைக்கவில்லை. தற்போது மீண்டும் இதுபோன்று பொதுமக்களை ஏமாற்றும் செயலில் தமிழக முதல்வர் இறங்கியுள்ளார்.
தேர்தல் வருவதால் திமுகவுக்கு பயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே தற்போது விடுபட்ட பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்திருக்கிறார்கள். ஆட்சியை இழந்து விடுவோம் என்ற பயம் திமுகவுக்கு வந்துவிட்டது. தற்போது நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி தேர்வில் விடியல் பயணம் எப்போது தொடங்கியது என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்களை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளதுபோல் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்கள் அனைவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உயிரோடு கரை திரும்பவில்லை.
ஆயிரம் ரூபாய் வழங்குவது மூலமாக பெண்களின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக தமிழக முதல்வர் பேசி வருகிறார். தமிழகத்தின் பால், சீனி, காய்கறிகள், பலசரக்குகள் விலை என்ன என்பது முதல்வருக்கு தெரியுமா?. ஆயிரம் ரூபாய் மூலமாக பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளார்கள் என்பது முற்றிலும் தவறு.
காமராஜர் பிறந்த நாளையொட்டி திமுகவினர், காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு கருணாநிதி காமராஜருக்கு என்ன செய்தார் என்பது தொடர்பாக பெருமையாக தெரிவித்து வருகிறார்கள். காமராஜருக்கு திமுக என்ன செய்தது என்று அனைவருக்கும் தெரியும். அதை வெளியே தெரிவித்தால் திமுகவுக்கு அசிங்கமாகிவிடும். தமிழகத்தில் தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையே இல்லை. அரசு பள்ளிகளில் ‘ப’ வடிவில் இருக்கை அமைப்பது தேவையில்லாதது.” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, எம்.ஆர். காந்தி எம்எல்ஏ உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.