சென்னை: தமிழகத்தை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். ஆனால், அது அவரது சொந்தக் கருத்து என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி இன்று வெளியிட்ட அறிக்கையில், “சமூக நீதி, மக்கள் உரிமைகளுக்காக பாமக தொடர்ந்து போராடி வருகிறது. தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் வரும் ஆபத்துகளை அரணாக இருந்து பாதுகாக்கும் இயக்கம்பாமக. தமிழ் மொழி, இனம், தமிழக மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமெனில், பாமக வலிமையுடன் பயணிக்க வேண்டும்.
தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால், தமிழகத்தை ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும். அது நமது உரிமையும்கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தை கூட்ட, ராமதாஸால் பாமக தோற்றுவிக்கப்பட்ட இந்நாளில் (ஜூலை 16) நாம் அனைவரும் உறுதியேற்போம்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் இன்று பாமக 37-வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற நிறுவனர் ராமதாஸ், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “சட்டப்பேரவைத் தேர்தலில் பாமகவுக்கு வெற்றியைத் தேடித்தர தொண்டர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘ஆட்சியில் பங்கு’ என்று அன்புமணி கூறியது அவரது சொந்தக் கருத்து” என்றார்.
‘ஆட்சியில் பங்கு’ முழக்கம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற முழக்கத்தை, அக்கட்சியின் தலைவர் விஜய் முன்னெடுத்தார். அதன்பிறகு ‘ஆட்சியில் பங்கு‘ என்பது தமிழக அரசியலில் மாபெரும் முழக்கமாக உருவெடுத்துள்ளது.
கூட்டணி பலத்தாலேயே திமுக, அதிமுக வெற்றி பெறுவதாக கூறி, கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் மனநிலை மாறியிருக்கிறது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்க பாஜக வியூகம் வகுத்து வருகிறது. அக்கட்சியின் தலைமையிடம் அன்புமணி நட்பு பாராட்டி வருகிறார். இந்தச் சூழலில் ஆளும் அரசில் பாமகவும் பங்கேற்க வேண்டும் என அவர் பேசியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.