திண்டுக்கல்: ஆடி கிருத்திகையையொட்டி, பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்ரூப தரிசனம், காலை 4.30 மணிக்கு விளா பூஜை நடைபெற்றது. முன்னதாக, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.
தொடர் விடுமுறை மற்றும் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். மலைக்கோயில் பொது மற்றும் கட்டண தரிசன வரிசையில் 4 மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
பராமரிப்பு பணி காரணமாக ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதனால் மின் இழுவை ரயிலில் (வின்ச்) மலைக்கோயிலுக்கு செல்ல கூட்டம் அலைமோதின. 3 மணி நேரம் வரை காத்திருந்து வின்ச் ரயிலில் பக்தர்கள் மலைக்கோயிலுக்கு சென்றனர்.
நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் அன்னதானம் சாப்பிட்டனர். கூட்டம் அதிக அளவில் இருந்ததால் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் யானை பாதை வழியாகவும், மலைக்கோயிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
தரிசனத்துக்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிஸ்கட், சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதே போல், பழநி திருஆவினன்குடி கோயில், பெரியநாயகியம்மன் கோயில், ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.