திருச்சி: ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) விவகாரத்தில், தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களை தமிழக அரசு எந்தக் காரணத்தைக் கொண்டும் கைவிடாது என தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அண்மையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருச்சி கே.கே.நகரில் இயங்கி வரும் அரசு உயர்நிலைப் பள்ளியும், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இப்பள்ளியை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்து, பள்ளியில் சேரும் மாணவர்களை வரவேற்று, அவர்களுக்கு புத்தகம், பேனாக்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், “தற்போது பணியில் உள்ள ஆசிரியர்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விவரம் முழுமையாக கிடைத்தவுடன் அது குறித்து சட்ட வல்லுநர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, பின்னர் இது குறித்து மேல்முறையீடு செய்யப்படும்.
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக ஆசிரியர் சங்கங்களும் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது. எந்தக் காரணத்தைக் கொண்டும் தமிழக அரசு ஆசிரியர்களை கைவிடாது” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
முன்னதாக, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரியவும், பதவி உயர்வு பெறவும் ஆசிரியர் தகுதி தேர்வில் (‘டெட்’) தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.