சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னையில் விழா நடைபெறும் புனித ஜார்ஜ் கோட்டை, விமான நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15-ம் தேதி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு சென்னையில், புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து 5-வது ஆண்டாக தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரையாற்றுகிறார்.
முன்னதாக, முப்படை, காவல் துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தொடர்ந்து நடை பெறும் நிகழ்ச்சியில், ஐயுஎம்எல் தேசியத் தலைவர் காதர் மொய்தீனுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதை வழங்குகிறார். இதுதவிர, கல்பனா சாவ்லா விருது, வீரதீர செயலுக்கான விருது உள்ளிட்ட விருதுகள், பதக்கங்களை வழங்குகிறார்.
விழா நடைபெறும் ஜார்ஜ் கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 9,000 போலீஸார் பாதுகாப்பு, கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், வணிக வளாகங்கள், கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் இதர முக்கிய இடங்களில் சோதனை, கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகள், ஹோட்டல்களில் தீவிர சோதனை நடத்தப்படுகிறது.
சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்து தகவல் தெரிந்தால், காவல் துறைக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீஸார் வாகனத் தணிக்கை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்துக்கு சமீபகாலமாக அடிக்கடி குண்டு மிரட்டல்கள் வருவதால், 3 அடுக்கு பாதுகாப்பு அமலில் உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும் 20-ம் தேதி நள்ளிரவு வரை 5 அடுக்கு பாதுகாப்பாக மாற்றப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் திரவப் பொருட்கள், ஊறுகாய், அல்வா, ஜாம், எண்ணெய் பாட்டில்கள் போன்றவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதால், உள்நாட்டு பயணிகள், விமானம் புறப்படும் நேரத்துக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச பயணிகள் மூன்றரை மணி நேரத்துக்கு முன்னதாகவும், விமான நிலையத்துக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதல்வர் பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கான முதல்கட்ட ஒத்திகை நிகழ்ச்சி கடந்த 8-ம் தேதி நடந்த நிலையில், நேற்று 2-ம் கட்ட ஒத்திகை நடத்தப்பட்டது. அடுத்த கட்டமாக 13-ம் தேதி ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறுகிறது.