சென்னை: ஆகஸ்ட் மாதத்தில் பணி ஓய்வு பெற உள்ள நிலையில், தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு, 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காவல் துறையின் சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, சென்னை காவல் ஆணையராக இருந்த சங்கர் ஜிவால், சட்டம் – ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இவரது பணிக் காலம் வரும் ஆகஸ்ட் 31-ம் தேதியுடன் முடிகிறது. அன்றைய தினமே அவர் ஓய்வு பெறுவார் என கூறப்பட்டது.
இதையடுத்து, சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபி யார் என்ற எதிர்பார்ப்பும், யாருக்கெல்லாம் அந்த வாய்ப்பு உள்ளது என்பது போன்ற விவாதங்களும் நடந்து வருகின்றன. அதில் குறிப்பாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குநரும் டிஜிபியுமான சீமா அகர்வால், காவல் உயர் பயிற்சி டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் இந்த பட்டியலில் முன்னணியில் உள்ளனர். இவர்களுடன் மேலும் சில ஐபிஎஸ் அதிகாரிகளும் மறைமுகப் போட்டியில் உள்ளனர்.
தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் பணி ஓய்வுபெற கிட்டத்தட்ட 3 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் புதிய டிஜிபியை தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். இதற்கான பட்டியலும் தயார் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மேலும் 6 மாதம் பணி நீட்டிப்பு வழங்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போதைய டிஜிபி சங்கர் ஜிவால் சிறப்பாக பணி செய்து வருவதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், இன்னும் ஓராண்டில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அடுத்துவரும் ஓராண்டும், குறிப்பாக 6 மாதங்கள் சட்டம் – ஒழுங்கில் மிக முக்கிய காலகட்டமாகக் கருதப்படுகிறது.
இந்தச் சூழலில் புதிய டிஜிபியை நியமிப்பதைவிட, தற்போது பணியிலிருக்கும் டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு மேலும் 6 மாதங்களோ அல்லது ஒரு வருடமோ பணி நீட்டிப்பு வழங்கலாம் என்ற முடிவுக்கு அரசு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்குமுன், சட்டம் – ஒழுங்கு டிஜிபிக்களாக இருந்த பலருக்கு பணி நீட்டிப்பு வழங்கிய முன் உதாரணமும் உள்ளது. அந்த அடிப்படையில், சங்கர் ஜிவாலுக்கும் பணி நீட்டிப்பு வழங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.