காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை முறையான பராமரிப்பில்லாமல் இருக்கிறது. இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருபவர்களுக்கு பரிசோதனைகள் செய்ய காலதாமதம் ஆவதாகவும், நோய் முற்றிய நிலையில் இருப்பதாக கூறி வரும்போதே அச்சுறுத்துவதாகவும் நோயாளிகளின் உறவினர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் நினைவாக 1969-ம் ஆண்டு அறிஞர் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தில் காஞ்சிபுரம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து கூட புற்றுநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். தற்போது 750 படுக்கைகள் கொண்ட ஒப்புயர்வு மையமாக இந்த புற்றுநோய் மருத்துவ மையத்தை தரம் உயர்த்த தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதற்காக ரூ.250.46 கோடியில் 750 படுக்கைகள் கொண்ட தரை மற்றும் மேலும் 5 தளங்கள் கொண்ட கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இவ்வளவு புகழ்பெற்ற இந்த மருத்துவமனையில் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக கவலை அளிப்பதாக சமூக ஆர்வலர்கள் பலர் புகார் தெரிவிக்கின்றனர். இந்த மருத்துவமனையில் இருக்கும் உள்நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது. இங்கு உணவு சமைக்கும் இடத்தில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அப்படியே மருத்துவமனையையொட்டி வெளியே விடப்படுகிறது.
இதனால் சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுகின்றன. மேலும் முறையாக சுத்தம் செய்யப்படாமல் வெளிப்புற பால்கனிகள், ஏ.சி. வைக்கும் இடங்களில் குப்பைகள் கிடக்கின்றன. முறையாக வெள்ளை அடிக்காமலும், வர்ணம் பூசாமமும் பல்வேறு இடங்கள் மிகவும் பழமையான கட்டிடங்கள் போல் உள்ளன. புதிதாக கட்டிடம் கட்டும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் அதனை கட்டி முடித்து செயல்பாட்டுக்கு கொண்டு வரும் வரை இந்த பழைய கட்டிடங்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
அதேபோல் இந்த மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளும் பல்வேறு புகார்களை கூறிவருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் கூறுகையில் எனது உறவினருக்கு இரைப்பை புற்றுநோய் பாதிப்பு உள்ளது. பெங்களூர் தனியார் மருத்துவமனையில் காட்டியபோது இரைப்பை புற்றுநோய் 3-வது நிலையில் உள்ளது. சிகிச்சை அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.
நான் விமான நிலையத்தில் பணி செய்தேன். அந்தப் பணியை விட்டுவிட்டு என் மனைவிக்கு சிகிச்சை அளிக்க வந்துவிட்டேன். காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனையில் காட்டியபோது எடுத்த எடுப்பிலேயே புற்றுநோய் 4-வது நிலையில் உள்ளது. என்றும் நாங்கள் நம்பிக்கை இழப்பதுபோல் பேசினர். தொடர்ந்து அவருக்கு 6-மாதம் கீமோ தெரபி கொடுக்கப்பட்டது.
ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. எனது மனைவி இப்போது மோசமான நிலையில் உள்ளார். அவர் ஐ.சியூவில் உள்ளார். ஆனால் உடல் முழுவதும் புற்றுநோய் பரவிவிட்டது. அவரை வீட்டுக்கு அழைத்துச்செல்லுங்கள் என்கின்றனர். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த நிலையில் வீட்டுக்கு அழைத்துச் சென்று என்ன செய்வது என்று மருத்துவமனை நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளேன் என்றார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது இந்த மருத்துவமனை முன்னாள் முதல்வர் அண்ணா நினைவாக கட்டப்பட்டது. இந்த மருத்துவமனை வளர்ச்சிக்கு பல கோடி ஒதுக்கப்பட்டாலும் அதன் பயன் கடைகோடி மக்களுக்கு போய் சேர்ந்ததா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இங்கு பணி செய்யும் பலர் தற்காலிக பணியாளர்களாக உள்ளனர்.
இவர்கள் எந்த அளவு ஈடுபாட்டுடன் பணி செய்வர் என்பது கேள்விக்குறியே. புற்றுநோய் முன்பெல்லாம் பணக்காரர்களுக்கு வரும் நோயாக இருந்தது. தற்போது அப்படி இல்லை. சிறிய குழந்தைகள், ஏழை எளிய மக்களுக்கு கூட வருகிறது. அவர்கள் அரசு மருத்துவமனையைத்தான் நாடி வருவர்.மருத்துவமனை நிர்வாகத்தை சரி செய்வதுடன் முறையாக இந்த மருத்துவ
மனையை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனை இயக்குநர் சரவணனிடம் பேசியபோது எங்கள் மருத்துவமனைக்கு ஊழியர்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலம் நியமித்து வருகிறோம். தற்போது கூட செவிலியர்கள் 120 பேரை நியமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே மருத்துவமனை மேம்படுத்துவதற்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. ஏழைகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பணிகளை செய்து வருகிறோம். ஆதரவற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனிப்பிரிவை ஏற்படுத்தவும் அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பியுள்ளோம் என்றார்.