வேலூர்: தவெக தலைவர் விஜய் பிரச்சாரரம் குறித்த கேள்விக்கு, “விஜய் முதலில் வெளியே வரட்டும். பிறகு பார்க்கலாம். அவர் பிரச்சாரத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன? வெள்ளிக்கிழமை வைத்தால் என்ன? என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருப்புமேடு சாலையில் உள்ள மண்டபத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று (செப்.10) நடைபெற்றது. இந்த முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு, மனு அளித்த பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி, வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் ப.கார்த்திகேயன், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணைமேயர் சுனில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக, செய்தியாளர்கள் சந்திப்பில், அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, ‘‘காவிரியில் தற்போது அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விடுவோம் என்று கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் கூறுவதில் என்ன இருக்கிறது. சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் தமிழர் என்பது மட்டுமல்ல, எனக்கு நீண்டகால நண்பரும்தான். எனவே, அவர் குடியரசு துணைத் தலைவராக வந்திருப்பதற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது அவர் செயல்பட்டால்தான் தெரியும். பார்க்கலாம் எப்படி இருக்குமென்று.
தமிழகத்தின் நலன் சார்ந்து அவர் செயல்படுவாரா? எனக் கேட்கிறீர்கள். அவரால் தமிழகத்துக்கு என்ன வரப்போகிறது. அவர் மேல்சபையின் தலைவர் என்ற வகையில் தமிழகத்துக்கு சாதகமான கேள்வி ஏதேனும் இருந்தால் கேட்கக்கூறுவார், அவ்வளவுதான் அவரால் முடியும்.
அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து என்ன சொல்ல. அது அவர்கள் கட்சி. அந்த கட்சியின் உள்விவகாரத்தில் தலையிடத் தயாராக இல்லை. இதுபோன்ற நிலைக்கு திமுகவும் காரணம் என்று பலரும் கூறியுள்ளனர். அவற்றையெல்லாம் புறம்தள்ளிவிட்டு போக வேண்டும். பதில்கூற வேண்டிய தேவையில்லை.
தாமிரபரணி ஆற்றை திமுக தலைமுழுகி விட்டதாக நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். அவர் புதிய பதவிக்கு வந்து வேகமாக இருக்கிறார். அவர் சட்டப்பேரவையில் எப்படி செயல்படுகிறார் என்பது திமுகவுக்கு தெரியும். தவெகா தலைவர் விஜய் பிரசாரத்தை சனிக்கிழமை வைத்தால் என்ன, வெள்ளிக்கிழமை வைத்தால் நமக்கு என்ன. முதலில் அவர் வெளிய வரட்டும் பார்க்கலாம்’’ என்றார்.