சென்னை: புண்ணியம் கிடைக்கும் என நான் திருநீறை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அழிக்கவில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவன் பேசியதாவது: “கோயிலுக்குச் செல்லும்போது அங்கே என் தலையில் ஒரு தொப்பி வைக்கிறார்கள். அதை எடுக்காமல் தலையிலேயே வைத்திருக்க முடியுமா? அடுத்த ஒரு நிமிடத்தில் அதை எடுத்து விடலாம். அதை வைப்பவர்களுக்கும் கூட நாம் எடுத்து விடுவோம் என்று தெரியும். அது ஒரு அடையாளம். அதே போல பூசாரி என் நெற்றியில் திருநீறு பூசினார். அவருடைய உணர்வை நான் மதிக்கிறேன். அவருக்கு நான் நன்றி சொன்னேன். அதை கொஞ்ச நேரம்தானே வைத்திருக்க முடியும். புண்ணியம் கிடைக்கும் என நான் அதை பூசிக் கொள்ளவில்லை. அவமதிக்க வேண்டும் என்றும் நான் அதை அழிக்கவில்லை.
என் மீது நம்பிக்கை, பாசம் வைத்திருப்பவர்கள் இன்றைக்கும் என்னை பல கோயில்களுக்கு அழைக்கிறார்கள். நான் போகிறேன். கலசத்தில் தண்ணீர் ஊற்றச் சொல்கிறார்கள், நான் ஊற்றுகிறேன். என் தாய் என்னை வரவேற்கும்போது எனக்கு ஆரத்தி எடுத்து என் நெற்றியில் திருநீறு பூசுகிறார். அதை ஏற்றுக் கொள்கிறேன். என் தாய்க்கு என்ன மதிப்பளிக்கிறேனோ, என் மக்களுக்கும் அதே மதிப்பை அளிக்கிறேன். அது மக்கள் மீது நான் வைத்திருக்கும் மதிப்பு” இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சென்ற விசிக தலைவர் திருமாவளவனுக்கு நெற்றியில் திருநீறு பூசப்பட்டது. அங்கிருந்து திரும்பி வரும்போது அவரிடம் செல்ஃபி எடுக்க சிலர் வந்தனர். அப்போது திருமாவளவன் தனது நெற்றியில் இருந்த திருநீறை அழித்து விட்டு செல்ஃபி எடுத்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.