சென்னை: அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக சார்பில் சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் சட்டப்பிரிவு செயலாளர் அரசு.அமல்ராஜ் அளித்த புகார் மனுவின் விவரம்: கடந்த சில நாட்களாக மதிமுக, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ மற்றும் உயிரினும் மேலாக கருதும் கட்சிக் கொடியை அவமதிக்கும் வகையில் சிலர் செயல்படுகின்றனர்.
அவர்கள் சமூக ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை பரப்பியும், சாதி மோதல்களை தூண்டும் விதமாகவும், தலைமை நிர்வாகிகளான வைகோ, துரை வைகோ மீது அவதூறு பரப்பி நன்மதிப்பை கெடுக்கும் வண்ணமும் செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் கட்சியின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவர்கள் சமூக ஊடகங்களில் பேசிய வீடியோக்களை நீக்க உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் புகாரளித்துள்ளனர். அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் டிஜிபி தலையிட்டு அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.