கோவை: கேலிச்சித்திரம் மூலம் அவதூறுகளை பரப்பும் திமுகவுக்கு 2026 தேர்தலில் மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கீழடி குறித்து முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெளிவான பதிலை கொடுத்து இருக்கிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதா இருக்கின்ற பொழுது, என்னென்ன நடவடிக்கை எடுத்தார்கள், அதன் பிறகு அதிமுக அரசு, கீழடி அகழாய்வில் எப்படி எல்லாம் ஈடுபட்டிருக்கிறது என்ற விளக்கத்தை முழுமையாக தெரிவித்து விட்டோம்.
ஒவ்வோர் அமைப்பும், அவரவர் விருப்பப்படுகிற தெய்வங்களை வழிபடுவது ஜனநாயகத்தின் உரிமை. அந்த அடிப்படையில் அவரவர் விரும்பும் கடவுளுக்காக, மதுரையில் முருக பக்த மாநாடு நடத்துகிறார்கள்.
ஆங்கிலம் பேசுவோர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரின் கருத்தை கூறுகிறார். தாய்மொழி என்பது முக்கியம் எனவும் அவர் கூறி இருக்கிறார். அதேபோல தாய்மொழி என்பது அனைவருக்கும் முக்கியம். தாய்மொழிக்கு கொடுக்கக் கூடிய முக்கியத்துவத்தை விட ஆங்கிலத்திற்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்ற வகையில்தான் அவர் கூறி இருக்கிறார்.
திமுக ஆட்சியைப் பொறுத்தவரை மக்கள் இடையே மிகப்பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டு இருக்கிறது. மக்கள் விரோத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதையெல்லாம் மடைமாற்றம் செய்வதற்காக, இப்படி கேலிச்சித்திரம் அவதூறு கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாகிக் கொண்டு இருக்கிறது திமுக. 2026 தேர்தலில் நிச்சயம் இதற்கான பதில் கிடைக்கும். மக்கள் தக்க தண்டனை வழங்குவார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, செ.ம.வேலுசாமி, எம்எல்ஏக்கள் அம்மன் அர்ச்சுணன், கே.ஆர்.ஜெயராம், பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.