சென்னை: பேரிடர் மற்றும் அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக சென்னை போலீஸார் நேற்று பிரம்மாண்ட ஒத்திகை நடத்தினர். அவசர காலங்களில் மக்களை காப்பதற்கும், உயிர்களை மீட்பதற்காகவும் சென்னை காவல் துறையில் பேரிடர் மீட்புக் குழு உருவாக்கப்பட்டது. 290 போலீஸார் கொண்ட இந்த 16 பேரிடர் மீட்புக் குழுவினர் ஆங்காங்கே தனித்தனி குழுவாகப் பிரிந்து சென்று பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
அதன் முன்னேற்பாடாக காவல்துறை மீட்புக் குழுவினர் மீட்புப் பணி செயலாக்கம், அவசர தேவைகளில் உயிர் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணி தொடர்பாக நேற்று எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் பிரம்மாண்ட ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர். பயிற்சி பெற்ற 290 போலீஸார் அடங்கிய 16 சிறப்பு மீட்புக் குழுக்களும் இந்தப் பயிற்சியில் பங்கேற்றன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாகச் சென்று மீட்புப் பணிகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி முதலுதவி அளித்தல், வேரோடு சாய்ந்த மரங்கள் அல்லது பிற அம்சங்களால் தடைபட்ட சாலைகளை சீர்படுத்துதல் மற்றும் மேம்பட்ட கயிறு நுட்பங்களைப் பயன்படுத்தி உயரமான கட்டிடங்களில் சிக்கித் தவிக்கும் நபர்களை மீட்டல் போன்ற ஒத்திகையில் ஈடுபட்டனர்.
தாழ்வான மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளிலிருந்து மக்களை ரப்பர் படகுகளைப் பயன்படுத்தி வெளியேற்றுதல், வலுவான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நெறிமுறைகளை நிறுவுதல் மற்றும் எந்த வொரு அவசர நிலைகளின்போதும் ஒருங்கிணைந்த மற்றும் தடையற்ற பதிலை உறுதி செய்வதற்கான தகவல் தொடர்பு திட்டங்களை ஒத்திகை பார்த்தல் ஆகியவையும் இதில் அடங்கும்.
இந்த ஒத்திகையை சென்னை தலைமையிடத்து கூடுதல் காவல் ஆணையர் விஜயேந்திர பிதாரி நேரில் பார்வையிட்டு குழுக்களின் ஒட்டுமொத்த தயார் நிலை மற்றும் செயல்பாட்டுத் திறனை ஆய்வு செய்தார். எந்தவொரு இயற்கை பேரிடர் சூழ்நிலையிலும் காவல் துறை சரியான நேரத்தில் உதவி வழங்கவும் பொதுமக்களை பாதுகாக்கவும் நன்கு தயாராக இருப்பதை உறுதி செய்வதே இந்தத் தயார் நிலை முயற்சியின் நோக்கம் என போலீஸ் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.