“எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரவிருக்கின்றன” என்று சொல்லிச் சொல்லிக் களைத்துப் போன அதிமுக, எந்தக் கட்சியும் இன்னும் கேட்டைத் திறக்காததால் தங்கள் கூட்டணிக்கு வரலாம் என கணிக்கும் கட்சிகளைத் தேடி தூதுவர்களை அனுப்ப ஆரம்பித்திருக்கிறது. அந்த வகையில் தான், பழைய பகையை எல்லாம் மறந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸை தேடிச் சென்று சந்தித்துப் பேசி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்.
பாமகவில் தந்தை – மகன் அரசியல் யுத்தம் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக தொடர்வதால், இவர்களில் யாரை தங்களது கூட்டணிக்குள் கொண்டு வருவது என்று தெரியாமல் குழம்பிப் போய் நிற்கிறது அதிமுக. திமுக-வையும் முதல்வர் ஸ்டாலினையும் அன்புமணி மிகக் கடுமையாக சாடுவதால் அவர் தங்கள் பக்கம் தான் வருவார் எனக் கணிக்கும் அதிமுக, அவர் மட்டும் வந்தால் போதாது ராமதாஸ் உள்ளிட்ட ஒட்டுமொத்த பாமக-வும் தங்கள் அணிக்கு வந்தால் தான் பலம் சேர்க்கும் என நினைக்கிறது.
ஆனால், மகனின் நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான முடிவை எடுத்து திமுக-வை அதிகம் சாடாமல் மென்மையான போக்கை கடைபிடித்து வருகிறார் ராமதாஸ். அவரை அப்படி திமுக பக்கம் சாய்ந்துவிடாமல் தங்கள் பக்கம் இழுக்கும் வேலைகளை அதிமுக-வும் பாஜக-வும் தீவிரப்படுத்தி உள்ளன. இதன் தொடக்கமாக சில தினங்களுக்கு முன்பு, முன்னாள் அதிமுக அமைச்சர் சி.வி.சண்முகத்தை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்துப் பேசினார்.
ராமதாஸுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை திமுக பக்கம் போய்விடாமல் தடுக்கவே இந்த சந்திப்பு நடந்ததாகச் சொல்கிறார்கள். அதன்படியே இந்த சந்திப்பு நடந்த அடுத்த சில தினங்களிலேயே தைலாபுரம் தோட்டத்துக்கு வந்து ராமதாஸை சந்தித்தார் சி.வி.சண்முகம். தனது இல்லத் திருமண விழாவுக்காக ராமதாஸுக்கு அழைப்பிதழ் கொடுக்கவே அவர் தைலாபுரம் வந்ததாக வழக்கமான சம்பிரதாய தகவல் சொல்லப்பட்டாலும், அழைப்பிதழ் ரெண்டாம்பட்சம் தான்… அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசவே சண்முகம் ராமதாஸை சந்தித்தார் என்கிறார்கள்.
தன்னுடன் வந்திருந்தவர்களை கொஞ்சம் வெளியில் இருக்கச் சொல்லிவிட்டு சுமார் அரை மணி நேரம் ராமதாஸுடன் தனியாக பேசி இருக்கிறார் சண்முகம். இது குறித்து நம்மிடம் பேசிய விழுப்புரம் மாவட்ட அதிமுக-வினர், “அதிமுக கூட்டணிக்கு வலு சேர்க்க பாமக-வும் கட்டாயம் தேவை என நினைக்கிறார் இபிஎஸ். பாஜக-வும் அதையே தான் விரும்புகிறது. ஆனால், அன்புமணி பாஜக அனுதாபியாக இருப்பது ராமதாஸுக்குப் பிடிக்கவில்லை. அதனால் இந்த விஷயத்தில் பாஜக நேரடியாக தலையிடாமல் அதிமுக மூலமாக ராமதாஸுடம் பேச்சுவார்த்தை நடத்த வைத்திருக்கிறது” என்றார்கள்.
இதுகுறித்து பாமக இணைப் பொதுச்செயலாளரான (ராமதாஸ்) சேலம் அருள் எம்எல்ஏ-விடம் பேசினோம். “சி.வி.சண்முகத்தின் தந்தையும் முன்னாள் எம்பி-யுமான மறைந்த வேணுகோபாலும் அய்யாவும் நெருங்கிய நண்பர்கள். அய்யாவை அப்பா என்று தான் சி.வி.சண்முகம் அழைப்பார். அதேபோல் அவரை மகனைப் போன்று தான் அய்யாவும் பார்ப்பார்.
இரு தலைவர்களும் சந்திக்கும்போது அரசியல் பேசாமல் இருந்திருக்க மாட்டார்கள். நிச்சயம் அரசியல் பேசப்பட்டிருக்க வேண்டும். கூட்டணி குறித்தும் பேசியிருக்கலாம். தமிழகமும், தமிழக மக்களும் நலமாக இருக்க வேண்டும் என அய்யா நினைக்கிறார். அதற்கு ஏற்ப பாமக-வினர் ஏற்றுக்கொள்ளும் கூட்டணியை அய்யா அமைப்பார்” என்றார் அவர்.
வெற்றிக் கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அப்பாவும் பிள்ளையும் அடித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ‘தேடும்’ அந்த வெற்றிக் கூட்டணி எது என்பது தான் யாருக்கும் புரியாத புதிராகவே நீடிக்கிறது!