சென்னை: சென்னையில் அறிஞர் அண்ணா மாரத்தான் மற்றும் மிதிவண்டி போட்டிகள் நாளை தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மறைந்த முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி சென்னை மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மாரத்தான் மற்றும் மிதிவண்டி போட்டிகள் சென்னை சிவானந்தா சாலையில் நாளை (செப்.27) நடைபெறுகின்றன. இதில் மாரத்தான் போட்டிகள் காலை 5.30 மணிக்கும், மிதிவண்டி போட்டிகள் காலை 7 மணிக்கும் தொடங்குகின்றன.
சிவானந்தா சாலையில் உள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையம் அருகே தொடங்கும் போட்டிகள் நேப்பியர் பாலம், தீவுத்திடல், காயிதே மில்லத் பாலம் இடதுபுறம் திரும்பி அண்ணாசாலை வழியாக மீண்டும் சிவானந்தா சாலையில் தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில், போட்டி தொடங்கிய இடத்திலேயே முடிவடையும்.
மிதிவண்டி போட்டிகள் 13, 15, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்காக 3 பிரிவுகளிலும், மாரத்தான் போட்டிகள் 17 முதல் 25 வயதுக்குட்பட்டவர்களுக்கும், 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் என 2 பிரிவுகளிலும் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு ரூ.5000, 2-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.3000, 3-ம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.2000 மற்றும் 4 முதல் 10 இடங்களில் வருபவர்களுக்கு ரூ.250 பரிசுத் தொகையாக வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 7401703480 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.