சென்னை: கோரிக்கைகளுக்காக அறவழியில் போராடிய அரசு மருத்துவர் சங்க தலைவரை பணியிட மாற்றம் செய்து பழிவாங்கக் கூடாது என்று, பாமக தலைவர் அன்புமணி, அரசு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் மாவட்டம் மேட்டூர் முதல் சென்னை கலைஞர் நினைவிடம் வரை அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழுவினர் நடைபயணம் மேற்கொண்டனர்.
இதற்காக, குழுவின் தலைவர் மருத்துவர் பெருமாள் பிள்ளையை சென்னையிலிருந்து நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதும், அவருக்கு குற்ற குறிப்பாணை 17-பி வழங்கப்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கவை. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. அவற்றை நிறைவேற்றுவதற்கு பதிலாக அவற்றுக்காக குரல் கொடுக்கும் மருத்துவர்களை பழிவாங்குவது நியாயமல்ல. இந்த நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மருத்துவர் பெருமாள் பிள்ளை மீதான பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சாமிநாதன், பொதுச்செயலாளர் ராமலிங்கம், சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் ஆகியோர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, அரசு மருத்துவர்களிடம் கேட்டபோது, “அரசின் இந்த நடவடிக்கை 19 ஆயிரம் அரசு மருத்துவர்களுக்கும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல வேதனையை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் பெருமாள் பிள்ளை மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ன்படி அரசு மருத்துவர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வர் நிறைவேற்ற வேண்டும்” என்றனர்.