சென்னை: கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும், அருணா ஜெகதீசன் விசாரணையை காங்கிரஸ் எதிர்க்கவில்லை எனும் விதமாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் மக்கள் நெரிசலினால் 41 பேர் உயிரிழந்ததோடு, அறுபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த துயர நிகழ்வு குறித்து அறிந்தவுடன் உடனடியாக தமிழக முதலமைச்சர் தலைமைச் செயலகம் சென்று அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை செய்தார்.
அத்துடன், போர்க்கால அடிப்படையில் மருத்துவ மற்றும் நிவாரண உதவிகளை அளித்திட நடவடிக்கை எடுத்தார். தலைமைச் செயலகத்திலிருந்து நேரடியாக விமான நிலையம் சென்று அங்கிருந்து விமானம் மூலமாக திருச்சி சென்று பிறகு கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து நலம் விசாரித்தார்.
இந்த துயர நிகழ்வில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண உதவிகளை அறிவித்தார். துயருற்ற மக்களுக்கு தேவையான உதவிகளை உடனடியாக செய்த தமிழக முதலமைச்சரை கட்சி எல்லைகளைக் கடந்து அனைவரும் பாராட்டுகிறார்கள்.
இந்நிலையில், கரூர் துயரச் சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்திட அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு நியமித்திருக்கிறது. நியமிக்கப்பட்ட உடனே அவர் கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணையை துரிதமாக மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே அதிமுக ஆட்சியில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திலும் இவர் தலைமையில் தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவரும் மிகச் சிறப்பாக விசாரணை நடத்தி அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பித்தார்.
இந்நிலையில், தமிழக அரசு நியமித்த ஒருநபர் ஆணையம் குறித்து காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஏ.பி. சூரியபிரகாசம், அருணா ஜெகதீசனை நியமித்தது தவறு, அப்பொறுப்பிலிருந்து அவரை உடனடியாக விலக்க வேண்டுமென்று ஊடகங்களின் வாயிலாக கருத்து தெரிவித்திருக்கிறார். அவரது இக்கருத்து கட்சியின் கொள்கைகளுக்கும், அணுகுமுறைகளுக்கும் விரோதமானதாகும். எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாத இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன். இத்தகைய அவசியமற்ற கருத்துகளை கூறுவது அரசியல் உள்நோக்கம் கொண்ட செயலாகும்.
இந்த கருத்து குறித்து உரிய விளக்கத்தை 15 நாட்களுக்குள் அளிக்குமாறு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. தகுந்த விளக்கத்தை 15 நாட்களுக்குள் அவர் தெரிவிக்கவில்லையெனில் ஏ.பி.சூரியபிரகாசம் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், கரூர் நிகழ்வு குறித்து காங்கிரஸ் கட்சியினர் எவரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க வேண்டாமென கேட்டுக் கொள்வதோடு, அப்படி தெரிவிப்பவர்கள் மீது இத்தகைய நடவடிக்கைகள் தொடரும் என கூற விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.