புதுச்சேரி: “அரிக்கமேடுவை சுற்றுலாத்தலமாக மாற்றும் பணி வேகமாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் புதுச்சேரி நிர்வாகம் அது மாதிரியுள்ளது, இதை சிரமப்பட்டு செய்கிறோம். கடந்த 2003ல் தொடங்கினோம் தற்போது 2025 ஆகிவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பாருங்கள்” என்று முதல்வர் ரங்கசாமி வருத்தம் தெரிவித்துள்ளார்.
பெருங்கடல் வள மையம், மவுலானா அபுல் கலாம் ஆசாத் ஆசிய ஆய்வுகள் நிறுவனம் (MAKAIAS), இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம், புதுச்சேரி அரசின் கலை மற்றும் கலாச்சாரத் துறை, சுற்றுலாத் துறை, ஆகியவை இணைந்து “அரிக்கமேடு ஒரு பிந்தைய காலனித்துவ இந்தியப் பெருங்கடல் வரலாறு மற்றும் தொல்லியல்” என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கை இன்று ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பேசியதாவது: ”அரிக்கமேடு குறித்து புதுச்சேரியில் இருக்கும் பலருக்கு தெரியுமா என்பது சந்தேகம். இதன் சிறப்பை அறிந்தோர் குறைவானோர் தான். புதுச்சேரி சிறிய மாநிலமாக இருந்தாலும் வரலாற்று பூர்வமான மாநிலம். இதில் அடங்கியுள்ள தொன்மையான தொல்லியல் சிறப்பை ஆராய்ந்து வெளியே கொண்டு வந்தால் சிறப்பாக இருக்கும். பண்டை காலத்தில் இருந்து புதுச்சேரியில் வணிகம் நடந்துள்ளதை அறியும் போது புதுச்சேரி நாகரிகத்தை உணர முடிகிறது.
புதுச்சேரியில் இருந்து நூலை துணிக்காக அக்காலத்தில் வெளிநாட்டுக்கு அனுப்பியுள்ளோம். அரிக்கமேட்டை ஆராய ஆராய்ச்சியாளர்கள் எடுத்துள்ளனர். அரிக்கமேடு கண்டறியும் முன்பு புதராக இருந்தது. நான் இன்னும் அந்த இடத்துக்கு செல்லவில்லை. சிறந்த அளவுக்கு கொண்டு வரவேண்டும். அது பெரிய அளவுக்கு வரவில்லை. சுற்றுலாப் பயணிகள் பார்த்து அறியும் அளவுக்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. பழமையான கட்டடங்களை வைத்து சுற்றுலாவை வெளிநாட்டில் மேம்படுத்துகின்றனர்.
நமது முன்னோர்கள் எப்படி இருந்தனர் என்பதற்கு அரிக்கமேடு உதாரணம். அரிக்கமேடு பழமையான கலாச் சாரத்தின் பிம்பம். அதை பெரிய சுற்றுலா இடமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். உண்மையில் சொல்ல வேண்டுமானால் நாம் எடுக்கும் இப்பணி வேகமாக நடக்க வாய்ப்பில்லை. புதுச்சேரி நிர்வாகம் அது மாதிரி. இன்று நினைத்தால் நாளை வராது. இதை சிரமப்பட்டு செய்கிறோம்.
கடந்த 2003ல் தொடங்கினோம் தற்போது 2025 ஆகிவிட்டது. எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று பாருங்கள். சுற்றுலாப் பயணிகள் சென்று வந்து தொன்மையான புதுச்சேரியை அறியும் வகையில் இதுவரை உருவாக்கவில்லை” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இந்நிகழ்வில் அமைச்சர் லட்சுமி நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.