கரூர்: கரூர் அருகே அரசுப் பள்ளி வளாகத்தில் தூய்மைப் பணி மேற்கொண்டதாக தவெகவினர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கரூர் மாவட்டம் தென்னிலையில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பள்ளிக்கு வந்த சில இளைஞர்கள், பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்வதாகக் கூறியுள்ளனர். அதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளா ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, அவர்கள் பொக்லைன் இயந்திரத்துடன் வந்து பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தனர்.
இதை வீடியோவாகப் பதிவு செய்த இளைஞர்கள், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சுத்தம் செய்து கொடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தனர். அதில் பள்ளித் தலைமை ஆசிரியை படமும் இடம் பெற்றிருந்தது.
இதற்கு, தமிழ்நாடு அறம்சார் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்ததுடன், “முன் அனுமதி பெறாமல் அரசியல் கட்சியினர் இதுபோல பணிகளை மேற்கொண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்ட நடவடிக்கையை, அரசுப் பள்ளியை விளம்பரத்துக்காகப் பயன்படுத்தியதாகத்தான் கருத முடியும். மேலும், பள்ளி மாணவர்களிடம் அக்கட்சியினர் அரசியல் குறித்து பேசியுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என வலியுறுத்தியது.
இதுகுறித்து கல்வித் துறை அலுவலர்கள் விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, தென்னிலை பள்ளி தலைமை ஆசிரியை சுஜாதா சியாமளா, குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு நேற்று முன்தினம் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.