சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு பாதயாத்திரை மேற்கொண்ட அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளையை, சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு பணியிடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், அவரை திருவள்ளூருக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப மருத்துவர்களையும், செவிலியர்களையும் நியமிக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன்படி உரிய ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்குழு தலைவரான டாக்டர் பெருமாள் பிள்ளை தலைமையில் அரசு மருத்துவர்கள் கடந்த ஜூன் 11 முதல் ஜூன் 19 வரை சேலம் மேட்டூரில் இருந்து சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி பாதயாத்திரை மேற்கொண்டனர். தேனாம்பேட்டை வந்தபோது, போலீஸாரால்
கைது செய்யப்பட்டு, பின்னர் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் இணை பேராசிரியராகப் பணியாற்றி வந்த டாக்டர் பெருமாள் பிள்ளை அனுமதியின்றி விடுப்பு எடுத்துள்ளதாகக் கூறி, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்தும், அவருக்கு குற்ற குறிப்பாணை வழங்கியும் தமிழக அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, தன்னை பழிவாங்கும் ரீதியாக நாகப்பட்டினத்துக்கு இடமாறுதல் செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி பெருமாள் பிள்ளை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா முன்பாக நடந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கவுதமன், “அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக்கோரி உயர் அதிகாரிகளிடம் அனுமதி கடிதம் கொடுத்துவிட்டு அதன்பிறகே மனுதாரர் அமைதியான முறையில் சக மருத்துவர்களுடன் பாதயாத்திரை மேற்கொண்டார். இந்நிலையில், அவரை நாகப்பட்டினத்துக்கு இடமாறுதல் செயதிருப்பது சட்டவிரோதமானது” என வாதிட்டார்.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.பிந்திரன், “இதுதொடர்பாக அரசின் பதில்மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும். மனுதாரருக்கு இடைக்கால நிவாரணமாக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நலப் பிரிவில் இணை பேராசிரியராக பணி வழங்க அரசு தயாராக உள்ளது” என தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, மனுதாரரை நாகப்பட்டினத்துக்கு இடமாற்றம் செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தும், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அவருக்கு இடமாறுதல் வழங்கவும் உத்தரவிட்டார். பி்ன்னர், இந்த வழக்கில் தமிழக அரசு இருவார காலத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.