சென்னை: “முதல்வர் ஸ்டாலின் ஏன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை. அங்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா?” என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.
தூத்துக்குடிக்கு புறப்படும் முன்பாக சென்னை விமான நிலையத்தில் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கூறியது: “தமிழகம் பற்றி முதல்வர் ஸ்டாலின் சிந்திப்பதைவிட, பிரதமர் மோடி அதிகம் சிந்திக்கிறார். ‘வீடு வீடாக சென்று, பாஜக நிதி தரவில்லை என்பதை கூறுங்கள்’ என்றார் ஸ்டாலின். அதேபோல, பிரதமர் மோடி இப்போது ரூ.4,300 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கிறார் என்பதையும் வீடு வீடாக சென்று கூறுங்கள்.
முதல்வர் ஸ்டாலின் பூரண குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். தனியார் மருத்துவமனையில் அமர்ந்து கொண்டு, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற பெயரில் வீடியோ காலில் பேசுகிறார். அவர் ஏன் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்லவில்லை. அங்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை இல்லையா? செந்தில் பாலாஜியின் தம்பி, வெளிநாடு சென்று மருத்துவ சிகிச்சை பெறுகிறார். வேறு பல அரசியல்வாதிகளும் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கோ, தனியார் மருத்துவமனைகளுக்கோ செல்கின்றனர்.
ஆனால், பிரதமர் மோடி, அரசு மருத்துவமனைக்கு சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வருவோர் அனைவருக்கும் ஒரேமாதிரியான சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசாங்கத்தின் நோக்கமாக இருக்க வேண்டும்.
‘கிட்னி திருட்டு எதுவும் நடக்கவில்லை. அது முறைகேடு’ என்கிறார் சுகாதாரத் துறை அமைச்சர். வீடு புகுந்து பொருட்களை திருடி செல்வது திருட்டா, முறைகேடா? பிரச்சினையை பூசி மெழுகுகிறார். இதில் ஏழை பாமர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை உரிமத்தை ரத்து செய்தால் போதுமா? இதில் திமுகவினர் பங்கெடுத்துள்ளனர். பாலியல் தொல்லை, கொலை, கொள்ளை, கிட்னி திருட்டு என எல்லாவற்றிலும் திமுகவினருக்கு பங்கு இருக்கிறது என்பது வேதனையான ஒன்று.
பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சீர்திருத்தம் நடைபெறுகிறது. வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்களின் பெயர்கள்தான் நீக்கப்படுகின்றன. இதற்கு திமுக ஏன் பதற வேண்டும். தமிழகத்திலும் தவறான பெயர்கள் நீக்கப்பட்டு, முறையான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்பட வேண்டும்” என்று தமிழிசை கூறினார்.