சாத்தூர்: அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள மருத்துவர்கள் பணியிடங்களை அரசு உடனே நிரப்ப வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளிடம் பேசும்போது, 2026 சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றுவது குறித்தும், அதற்காக வாக்குச்சாவடி வாரியாக பொறுப்பாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது பற்றியும் விளக்கினார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள பல்வேறு நலத்திட்டப் பணிகளை வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று தெரிவித்து விளக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பலர் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது காவல் துறை எஸ்.ஐ. வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் குடும்பத்துக்கும் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களுக்கு பணம் கொடுப்பதில்தான் தமிழக முதல்வர் உள்ளார். இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்தும் இடத்தில் முதல்வர் இல்லை என்பது மிகவும் வருத்தமான விஷயம்.
ஆவணக் கொலைகளுக்கு தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்று முதலில் கூறியது நான்தான். இந்த ஆட்சி படுபாதாளத்துக்கு சென்றுகொண்டிருக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள்கள், மதுப் பழக்கம், பாலியல் வன்கொடுமைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. மருத்துவமனையில் பாம்பு கடிக்கும், நாய் கடிக்கும் மருந்து இல்லை என்று கூறுகிறார்கள். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பல மருத்துவமனைகளில் கட்டிடங்கள் உள்ளன, போதுமான மருத்துவர்கள் இல்லை. உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்தக் கூட்டத்துக்கு, மாநில துணைத் தலைவர் கோபால்சாமி, மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரை ராஜா, கிழக்கு மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் தலைமை வகித்தனர்.