சென்னை: குறைந்த கட்டணத்தில் இதழியல் படிப்பை வழங்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ‘சென்னை இதழியல் நிறுவனம்’ தொடங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டய படிப்பை இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. நிர்வாகக் குழு தலைவராக ‘தி இந்து’ குழுமத்தின் இயக்குநரும் ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியருமான என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இதழியல் துறையில் ஆர்வம் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் நோக்குடனும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, ஊடக கல்வியை வழங்குவதற்காகவும், இதழியலை தொழிலாக தொடங்க விரும்பும் தமிழக இளைஞர்களுக்கு குறைந்த கட்டணத்தில் முதுநிலை பட்டய படிப்பை வழங்குவதற்காகவும் தமிழக அரசு சார்பில் ‘சென்னை இதழியல் நிறுவனம்’ தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி, சென்னையில் 2025-26-ம் கல்வி ஆண்டு முதல் சென்னை இதழியல் கல்வி நிறுவனம் தொடங்கப்படும். இதற்காக, ரூ.7.75 கோடி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சட்டத்தின்கீழ் சென்னை இதழியல் நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இதழியல் முதுநிலை பட்டய படிப்பை நடப்பு (2025- 26) கல்வி ஆண்டு முதல் தொடங்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இக்கல்வி நிறுவனத்தின் நிர்வாகக் குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ‘தி இந்து’ குழும இயக்குநரும் ‘தி இந்து’ நாளிதழின் முன்னாள் முதன்மை ஆசிரியருமான என்.ரவிக்கும் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ். பன்னீர் செல்வத்துக்கும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நியமன ஆணைகளை வழங்கினார்.
இதில் துறை செயலர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.