மதுரை: அரசு ஊழியர் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும்போது, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கையை தொடரலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையில் உதவி தொடக்கக் கல்வி அலுவலராகப் பணிபுரிந்தவர் பொன்னழகு. இவர் லஞ்ச ஒழிப்பு வழக்கில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதை ரத்து செய்து, ஓய்வுபெற அனுமதித்து, அனைத்து பணப் பலன்களையும் வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தனி நீதிபதி, “லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி, மனுதாரர் மீதான வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடித்து, நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையில் மனுதாரர் விடுவிக்கப்பட்டால், பணியிடை நீக்கத்தை ரத்து செய்து ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும்” என உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து தொடக்கக் கல்வி இயக்குநர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இதை விசாரித்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசு ஊழியர் மீதான குற்றவியல் நடவடிக்கையும், துறை ரீதியான நடவடிக்கையும் வெவ்வேறானது.
குற்ற வழக்குப் பதிவு செய்யும்போது சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார். ஒரே நேரத்தில் குற்றவியல் நடவடிக்கையும், துறை ரீதியான விசாரணையையும் மேற்கொள்ளலாம். இதற்குத் தடையில்லை.
லஞ்ச வழக்கின் விசாரணையை 4 மாதங்களில் முடித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு தேவையற்றது. குற்றப்பத்திரிகையில் மனுதாரர் விடுவிக்கப்பட்டால், ஓய்வூதியப் பலன்களை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது.
குற்ற வழக்கில் ஒருவரைத் தண்டிக்க சரியான ஆதாரம் வேண்டும். துறை ரீதியான விசாரணையின்போது அதுபோன்ற ஆதாரம் தேவையில்லை. லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டாலும், தவறான நடவடிக்கைக்காக அரசு ஊழியரைத் தண்டிக்கலாம்.
குற்ற வழக்கில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளையே, ஒழுங்கு நடவடிக்கையிலும் பின்பற்ற வேண்டும் என்பதை ஏற்க முடியாது. குற்ற வழக்கில் விடுதலையானாலும், அது துறை ரீதியான விசாரணைக்குத் தடையாக இருக்காது. தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மேல்முறை மனு ஏற்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறியுள்ளனர்.