சென்னை: அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அவர்களின் பிள்ளைகளுக்கான திருமண முன்பணம் அரசால் வழங்கப்படுகிறது. முன்னதாக கடந்த 1989-ம் ஆண்டு, அரசு ஊழியர் அல்லது அவரது மகன் திருமணத்துக்கு ரூ.3 ஆயிரம், பெண் ஊழியர் அல்லது மகள் திருமணத்துக்கு ரூ.5 ஆயிரம் முன்பணமாக வழங்கப்பட்டது. அதன்பின், 1995-ல் இத்தொகை ரூ.6 ஆயிரம் மற்றும் 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது பணிக்காலத்தில் தேவையின் அடிப்படையில் திருமண முன்பணமாக இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் ஆண்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இதனை பல மடங்கு உயர்த்தி அரசு அலுகள், ஆசிரியர்கள் அனைவருக்ககும் பொதுவாக ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்’’ என அறிவித்தார்.
இதன்படி, திருமண முன்பணத்தை ரூ.5 லட்சமாக உயர்த்தி நிதித்துறை செயலர் உதயச்சந்திரன் அரசாணை வெளியிட்டுள்ளார். மேலும், இதற்கான வழிகாட்டுதலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முன்பணமானது, அரசு ஊழியரின் 15 மாத அடிப்படைச் சம்பளம் அல்லது ரூ.5 லட்சம் இதில், எது குறைவோ அது வழங்கப்படும். ஓய்வுபெற 5 ஆண்டுகள் வரை இருக்கும் ஊழியர்கள் முன்பணம் பெறலாம்.
கணவன், மனைவி, பெற்றோர் அரசு ஊழியர்களாக இருப்பின், ஒரு குடும்பத்தில் ஒரு முறை மட்டுமே முன்பணம் பெற முடியும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளன.