சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு கேள்வி தயார் செய்வதில் கவனக்குறைவுடன் செயல்படுவதாக தமிழக அரசுக்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வில், அய்யா வைகுண்டர் குறித்த கேள்வியின் ஆங்கில மொழிபெயர்ப்பில், முடிசூடும் பெருமாள் என்ற அய்யா வைகுண்டரின் பெயர், ‘தி காட் ஆஃப் ஹேர்கட்டிங்’ (The God of Hair Cutting) என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கவனக்குறைவாகவும், பொறுப்பின்றியும் மொழிபெயர்த்தது கடும் கண்டனத்துக்குரியது.
‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தின் சரியான கூற்றுகளை கண்டறியவும்’ என்ற கேள்விக்கு, ‘2024-ம் ஆண்டு ஐ.நா. சபையிடம் இருந்து விருதை பெற்றது’ என்பதை, ‘இட் பெக்டு தி யூனைட்டட் நேஷன்ஸ் அவார்டு’ (It begged the United Nations Award) அதாவது, ‘யாசகம் எடுத்தார்கள்’ என்று மொழிபெயர்த்துள்ளனர்.
திமுக தலைவர்கள் காலம் காலமாக, இல்லாத விருதுகளை வாங்கியதாக கூறிவருவதால், கேள்வி தயாரித்தவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டிருக்கலாம். எனினும், அரசுப் பணி தேர்வுகளுக்கான கேள்விகளை தயார் செய்வதில் இதுபோல கவனக்குறைவாக இருப்பதுதவறு.
தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை திமுக அரசு கிள்ளுக்கீரையாக நினைப்பதையே இது காட்டுகிறது. கோபாலபுரம் குடும்பத்தினர்போல, எந்த தகுதியும் இன்றி மேலே வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அல்ல தமிழக இளைஞர்கள். அரசுப் பணித் தேர்வுகளுக்காக கடுமையாக உழைக்கும் அவர்களை அவமானப்படுத்தும் போக்கை, திமுக அரசு இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.