புதுடெல்லி: தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை கோரி வழக்கு தொடர்ந்த அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் அரசின் பல்வேறு சேவைகள் இல்லங்களை நேரடியாக சென்றடையும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டமும், மருத்துவ சேவைகளை வழங்கும் விதமாக நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
இந்த திட்டங்களில் உள்ள முதல்வர் ஸ்டாலின் பெயரை நீக்கக்கோரியும், உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை அரசின் திட்டங்களில் பயன்படுத்த தடை கோரியும் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஸ்டாலின் படத்தைப் பயன்படுத்தலாம். ஆனால் அவரது பெயரை பயன்படுத்தக் கூடாது என்று தடை விதித்தது. இந்த தடையை நீக்கக்கோரி திமுக மற்றும் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் மீதான விசாரணை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதிகள் கே.வினோத் சந்திரன், என்.வி.அஞ்சரய்யா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.
அப்போது திமுக தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹ்தகி, பி.வில்சன் ஆகியோரும் தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகி வாதிட்டனர். அதையடுத்து நீதிபதிகள், அரசின் திட்டங்களுக்கு முதல்வரின் பெயரை சூட்டக்கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் எங்கு உள்ளது.
அந்த தீர்ப்பில் ஆளுநர்கள் மற்றும் அமைச்சர்களின் படங்களை பயன்படுத்தும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. திட்டங்களுக்கு முதல்வர் பெயரை வைப்பதில் என்ன பிரச்சினை என கேள்வி எழுப்பினர். அப்போது சி.வி.சண்முகம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மனீந்தர் சிங், பாலாஜி சீனிவாசன் ஆகியோர், அரசின் திட்டங்களுக்கு உயிருடன் வாழும் அரசியல் தலைவர்களின் பெயர்களை வைக்கக் கூடாது என்பது தேர்தல் ஆணைய விதியாகும் என்றனர்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: அரசின் நலத்திட்டங்களுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த 3 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு இருப்பது தவறானது. அந்தந்த கட்சிகள் ஆட்சிக்கு வரும்போது தங்களது தலைவர்கள் பெயர்களில் திட்டங்களை தொடங்குவது வழக்கமானதுதான். ஆனால் தற்போது இந்த பொதுநல வழக்கு ஒரு அரசியல் கட்சியையும், அதன் தலைவரையும் குறிவைத்து தொடரப்பட்டுள்ளது.
பொதுநலனுடன் கூடிய அக்கறை இருந்திருந்தால் இதற்கு முன்பாக தொடங்கப்பட்ட மற்ற திட்டங்களையும் எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். ஆனால் தற்போது தொடரப்பட்டுள்ள இந்தவழக்கு மனுதாரரின் உண்மையான நோக்கம் என்ன என்பதை வெட்ட வெளிச்சம் போட்டு காண்பித்துள்ளது. அரசியல் ரீதியிலான போராட்டங்கள் வாக்காளர்களுக்கு முன்பாக நடக்கலாம்; நீதிமன்றங்களில் கூடாது.
மேலும் தற்போது தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் இல்லை. எனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையும் ரத்து செய்கிறோம். அதே போல பொதுநலன் என்ற பெயரில் உள்நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ள அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கிறோம்.
இந்த அபராதத்தை அவர் ஒருவார காலத்துக்குள் தமிழக அரசிடம் செலுத்த வேண்டும். மீறும்பட்சத்தில் அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும். மனுதாரர் செலுத்தும் அபராத தொகையை தமிழக அரசு ஏழைகளுக்கான திட்டங்களுக்கு செலவிட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளனர்.