திண்டுக்கல்: தமிழ்நாட்டில் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதை மறுப்பதற்கு இல்லை. விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார் என, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ எம்.பி. தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டது உட்கட்சி விவகாரம். உட்கட்சி விவகாரத்தில் கருத்து சொல்ல விரும்பவில்லை அது ஆரோக்கியமாக இருக்காது. அதிமுக மிகப்பெரிய இயக்கம். செங்கோட்டையன் தரப்பு நியாயம் குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
அதிமுகவை பின்னால் இருந்து பாஜக இயக்குகிறது என்று குற்றச்சாட்டு இருக்கிறது. ஆனால் இதில் உண்மை என்ன என்பது தெரியவில்லை. கடந்த காலங்களில் இந்தியா முழுவதும் கூட்டணியில் பிளவுகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் பாஜகவினர். அந்த சந்தேகத்தின் அடிப்படையில், அதிமுக பிரச்சனையில் பாஜக இருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. மற்ற கட்சிகளை பலவீனப்படுத்துவதை பாஜக செய்து வருகிறது. இது தவறான விஷயம். ஜனநாயகத்திற்கு புறம்பானது.
தமிழ்நாட்டில் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர். இதை மறுப்பதற்கு இல்லை. விஜய் அரசியலில் மிகப்பெரிய உந்து சக்தியாக இருப்பார். விஜய்க்கு கணிசமான வாக்கு வங்கி உள்ளது. அதனை வைத்து உச்ச நிலைக்கு வர முடியாது என்பது இல்லை. ஆனால் அடுத்த வருடமே தேர்தலில் எம்ஜிஆர் போல் முதன்மை இடத்தை அடைவதற்கு வாய்ப்பு கிடையாது.
ஒவ்வொரு கட்சியும் தனி சின்னத்தில் நிற்க வேண்டும் என நினைப்பார்கள். அதையே தான் மதிமுகவும் விரும்புகிறது. கட்சி தலைமை தான் இதுகுறித்து முடிவு எடுக்கும். கூடுதல் சீட்கள் கேட்டுப் பெறுவது குறித்து கட்சித் தலைவர் வைகோ முடிவெடுப்பார்.
மதுரை மாநகராட்சியில் மோசடி புகார் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் தவறு செய்த அனைவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதவி நீக்கவும் செய்துள்ளனர். தவறே இல்லாமல் அரசாங்கம் நடத்துவது கஷ்டம்.
சசிகலா சர்க்கரை ஆலை பிரச்சினை பல ஆண்டுகளாக உள்ளது. சிபிஜ விசாரணைக்கு சென்று நீதிமன்றத்திலும் தீர்ப்புகள் வந்துள்ளது. கைது நடவடிக்கையும், சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளது.
எந்த நோக்கத்திற்காக திமுக கூட்டணி இணைந்தோமோ அந்த நோக்கத்திற்காக தொடர்ந்து இருந்து வருகிறோம். திமுகவில் நீடிக்கிறோம் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறோம்.
திமுக கூட்டணியில் தேமுதிக சேர்ந்தால் கூட்டணி பலமடையும் எங்களுக்கு சந்தோஷம் தான். வெற்றிகள் எளிதாக கிடைக்கும்.
2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி அடையும் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். திமுக ஆட்சியின் திட்டங்களை வைத்து மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார் என நினைக்கிறோம், என்றார். பேட்டியின் போது திண்டுக்கல் மாவட்ட செயலார் செல்வராகவன் உள்ளிட்ட நிர்வாகிகளள் உடன் இருந்தனர்.