“பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுக-வில் சேர்க்க வேண்டும்” என கெடுவைத்துக் கிளம்பி இருக்கிறார் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். “அதிமுக-வுக்கு துரோகம் செய்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க சாத்தியமே இல்லை” என டெல்லி வரைக்கும் போய் சொல்லிவிட்டு வந்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.
இப்படி, பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை முன்னிட்டு இன்னும் தெளிவான திசையை நோக்கி திடமாக பயணிக்க முடியாமல் இருக்கும் நிலையில், 2021-ல் தங்களுக்கு கைகொடுத்த பாமக-வுக்குள் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் நடக்கும் அதிகார யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இபிஎஸ் மெனக்கிட வேண்டும் என்ற கரிசனக் குரல்கள் பாமக தரப்பிலிருந்து கேட்க ஆரம்பித்திருக்கின்றன.
இன்றைய நிலையில், அதிமுக அணிக்கு சாதகமான மனநிலையில் இருக்கும் கட்சிகளில் ஓரளவுக்கு கணிசமான வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சி பாமக. ஆனால், ராமதாஸ் – அன்புமணி மோதலால் அந்த வாக்கு வங்கி இம்முறை ஒருமுகமாக அதிமுக அணிக்கு கிடைக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது. அசுர பலத்துடன் நிற்கும் ஆளும் கட்சிக் கூட்டணியை சமாளிக்க வேண்டுமானால் அதற்கு ஒன்றுபட்ட பாமக-வின் தயவு அதிமுக-வுக்கு தேவை.
இது குறித்து நம்மிடம் பேசிய தருமபுரி மாவட்ட பாமக நிர்வாகிகள் சிலர், “அதிமுக உட்கட்சி பிரச்சினை குறித்தான தனது நிலைப்பாட்டை இபிஎஸ் தெளிவாக சொல்லிவிட்டார். இப்படிச் சொல்லிவிட்டு இருந்துவிட்டால் மட்டும் ஓட்டு விழுந்துவிடாது. சொந்தக் கட்சி பிரச்சினைகளை ஒதுக்கி வைத்துவிட்டு வலுவான கூட்டணியை கட்டமைப்பதற்கான வேலைகளை அவர் இனியாவது தொடங்க வேண்டும். அதற்கு, முதலில் அவர் செய்ய வேண்டியது மருத்துவர் ராமதாஸையும் அன்புமணியையும் சமாதானப்படுத்துவது தான்.
வட மாவட்டங்களில் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமக இப்போதும் வலிமையோடு இருக்கிறது. 2001-ல் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 20 இடங்களை வென்றது. 2006-ல் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது. 2016-ல் தனித்து நின்றே சுமார் 22 லட்சம் வாக்குகளைப் பெற்றது பாமக.
இதெல்லாம் தெரிந்து தான் தனது ஆட்சியின் முடிவில் வன்னியருக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கி ஆணை பிறப்பித்தார் இபிஎஸ். அதனால் தான் 2021 தேர்தலில் வடமாவட்டங்களில் அதிமுக கூட்டணிக்கு கணிசமான வெற்றியும் கிடைத்தது. இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடுத்து வந்த திமுக அரசு தனது கடமையை சரியாகச் செய்யவில்லை என்று ஆதங்கத்தில் இருக்கும் வன்னியர் சமூகத்தினர், அதிமுக மீது இன்னமும் அனுதாபத்துடன் இருக்கிறார்கள்.
பாமக ஒன்றுபட்டு இருந்து அதனுடன் அதிமுக-வும் கூட்டணி சேர்ந்தால் நிச்சயம் கடந்த முறையை விட கூடுதலான இடங்களில் வெல்லமுடியும் என்று வன்னியர் மக்கள் வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டு மருத்துவர் அய்யாவையும் அன்புமணியையும் ஒன்றாக உட்காரவைத்துப் பேசி பாமக-வை மீண்டும் ஒன்றுபடுத்தும் முயற்சியை இபிஎஸ் எடுக்க வேண்டும். சொந்தக் கட்சியினரும் அய்யாவின் குடும்பத்தினரும் எடுக்கும் முயற்சிகளை விட பாமக ஒற்றுமைக்காக இபிஎஸ் எடுக்கும் முயற்சிக்கு நிச்சயம் பலன் கிடைக்கும்” என்றார்கள்.
இதுகுறித்து ராமதாஸ் தரப்பு பாமக இணைப் பொதுச்செயலாளரான அருள் எம்எல்ஏ-விடம் கேட்டபோது, “நெல்லிக்காய் மூட்டை போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடந்த வன்னியர் சமூகத்தை ஒருங்கிணைத்து கட்டி எழுப்பி பாமக-வாக உருவாக்கியவர் மருத்துவர் ராமதாஸ் தான். அவரை தலைவராக கொண்ட ஒருங்கிணைந்த பாமக தான் வலிமையான பாமக-வாக இருக்க முடியும். அத்தகைய வலிமையான ஒருங்கிணைந்த பாமக அதிமுக கூட்டணியில் இடம்பெறும்போது அந்த அணி 2026 தேர்தலில் வென்று கண்டிப்பாக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். இப்படி ஒரு அணி உருவாக அமித் ஷா, இபிஎஸ் போன்றவர்கள் முயற்சி எடுக்க வேண்டும்” என்றார்.