கரூர்: கரூர் ரயில் நிலைய சந்திப்பில் நடைபெற்று வரும் அம்ரித் பாரத் திட்டப் பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார்.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை ரயில் நிலையங்களில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப் படும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் சென்னையில் இருந்து தனி ரயில் மூலம் திருச்சி வழியாக இன்று (ஜூன் 17) கரூர் ரயில் நிலைய சந்திப்புக்கு (ஜங்ஷன்) வந்து ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது நுழைவாயில் பகுதி, ரயில் நிலைய சந்திப்பு முகப்பு பகுதி, ரயில் நிலைய நுழைவுப் பகுதிகளில் நடைபெற்று வரும் பணிகள், புதிதாக கட்டப்பட்ட பார்சல் புக்கிங் அலுவலகம் ஆகியவற்றை பார்வையிட்டு அவற்றில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு பொது மேலாளர் ஆர்.என்.சிங் அறிவுறுத்தினார்.
சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், முதன்மை திட்ட மேலாளர் கங்கா ராஜூ, கரூர் ரயில் நிலைய மேலாளர் சேவியர் இக்னிஷியஸ், வணிக முதன்மை மேலாளர் செல்வராசன், சேலம் கோட்ட மக்கள் செய்தி தொடர்பாளர் ஜி.மரிய மைக்கேல் ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக, சேலத்தில் இருந்து தனி ரயிலில் கேட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் அதிகாரிகளுடன் கரூர் வந்திருந்தார்.
சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் பொதுமேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டார். கரூர் ரயில் நிலைய சந்திப்புக்கு வருகை தந்த ஆர்.என்.சிங்கிற்கு கரூர் எஸ்.ஆர்.எம்.யு ஊழியர் சங்கம் சார்பில் ஊழியர்கள் ஜிந்தா பாத் என வாழ்த்து கோஷமிட்டு வரவேற்பு அளித்து ஆளுயர மாலை அணிவித்து வரவேற்றனர். கரூர் ரயில் நிலைய சந்திப்பில் ஆய்வினை முடித்துக் கொண்டு தனி ரயிலில் அதிகாரிகளுடன் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஈரோடு புறப்பட்டு சென்றார்.