சென்னை: அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய 4 ரயில் நிலையங்களை அடுத்த 5 மாதங்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், சென்னை ரயில்வே கோட்டத்தில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி, ஜோலார்பேட்டை, கும்மிடிப்பூண்டி, கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, அம்பத்தூர், கிண்டி, மாம்பலம், சென்னை பூங்கா, சென்னை கடற்கரை, குரோம்பேட்டை, திரிசூலம் ஆகிய 15 நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதத்தில், தெற்கு ரயில்வேயில் பரங்கிமலை, சூலூர்பேட்டை உட்பட 13 ரயில் நிலையங்கள் ரூ.129.66 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்டு, திறக்கப்பட்டன. தொடர்ந்து, பல்வேறு நிலையங்களில் மேம்படுத்தும் பணிகள் நடக்கின்றன. இந்நிலையில், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் அரக்கோணம், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் ஆகிய 4 ரயில் நிலையங்களை அடுத்த 5 மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டு வர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் சைலேந்திர சிங் ஆகியோர் சென்னை புறநகர் மின்சார ரயில் வழித்தடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக, ரயில்கள் இயக்கம், பாதுகாப்பு அம்சங்களில் பணியாற்றும் அலுவலர்களின் கருத்துகளைக் கேட்டனர். பணிகளை துரிதப்படுத்தி, விரைவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேற்கண்ட 4 ரயில் நிலையங்களையும் அடுத்த 5 மாதங்களில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் பயணிகள் காத்திருப்பு அறை, நகரும் படிக்கட்டுகள், நடை மேம்பாலம், உட்பட பல்வேறு வசதிகள் இடம்பெறும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.