திருச்செந்தூர்: அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு தினம் ஒரு பெயரை வைத்து மக்களை ஏமாற்றி மடைமாற்றம் செய்கின்றனர் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டினார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி ‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி அவர் திருச்செந்தூரில் இன்று மாலை நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசியது: “திருச்செந்தூர் ஆன்மிக பூமி. விவசாயிகள், பனைத் தொழிலாளர்கள், மீனவர்கள் அதிகம் வாழுகின்றனர். அவர்களுக்கு அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன.
மீண்டும் அதிமுக ஆட்சி அமையும்போது வாழை விவசாயிகள் காற்றினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். மீன்பிடித் தடைக்கால உதவித் தொகை, உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண தொகை உயர்த்தி வழங்கப்படும். ஏழை மீனவர்கள், விவசாயிகளுக்கு இலவசமாக கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்கப்படும். ஏரிகள், குளங்கள் தூர்வாரப்படும். குடிமராமத்து திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். விவசாயிகளுக்கு தடையற்ற மும்முனை மின்சாரம் வழங்கப்படும். ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது பெண்களுக்கு அற்புதமான சேலை வழங்கப்படும்.
திமுக ஆட்சியில் அனைத்து அத்தியாவசிய பொருட்கள், கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. ஆனால், மக்களுக்கு வருமானம் இல்லை. கடந்த அதிமுக ஆட்சியில் விலை உயர்வு கட்டுக்குள் இருந்தது. மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் போது விலைவாசி உயர்வு கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படும்.
திமுக தேர்தல் நேரத்தில் 525 வாக்குறுதிகளை அளித்தார்கள். இதுவரை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. அவற்றை நிறைவேற்றியதாக முதல்வர் பச்சை பொய் கூறுகிறார். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்றார். ஆனால், 100 நாள் வேலை திட்டம் 50 நாள் வேலை திட்டமாக மாறிவிட்டது. அவர்களுக்கான சம்பளத்தையும் நாங்கள்தான் மத்திய அரசிடம் பேசி பெற்று கொடுத்துள்ளோம்.
தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது. காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லை. பெண்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. பாலியல் சீண்டல்கள் அதிகரித்துள்ளது. தங்கம், வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்பது போல தற்போது மக்கள் கொலை நிலவரத்தை பார்க்கும் நிலை வந்துவிட்டது. கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. மாணவர்கள், இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி சீரழிகிறார்கள். காவல் துறையின் கைகள் கட்டப்பட்டு, திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டதால் தான் போதைப்பொருள் விற்பனையை தடுக்க முடியவில்லை. தமிழக அரசு செயல் இழந்து காட்சியளிக்கிறது.
அதிமுக கொண்டுவந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி நிறைவேற்றுகின்றனர். அதுபோல முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த அம்மா ஆரோக்கிய திட்டத்தை பெயர் மாற்றி ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ என நடத்துகின்றனர். திட்டங்களுக்கு தினம் தினம் ஒரு பெயர் வைக்கும் விளம்பர மாடல் அரசாக திமுக அரசு உள்ளது. இதன் மூலம் மக்களை ஏமாற்றி மடைமாற்றம் செய்கின்றனர்.
அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த அம்மா மருந்தகங்கள், தாலிக்கு தங்கம் திட்டம், மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் போன்றவை நிறுத்திவிட்டனர். அதிமுக அரசு அமையும் போது இந்த திட்டங்கள் மீண்டும் நிறைவேற்றப்படும்.
50 மாதங்கள் மக்களை பற்றியே சிந்திக்காத முதல்வர் மு.க.ஸ்டாலின், தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்துகிறார். இதில் 46 பிரச்சினைகளுக்கு மனு கொடுக்கலாம் என தெரிவித்துள்ளார். 50 மாதங்களில் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு 8 மாதங்களில் எப்படி தீர்க்க போகிறார்கள். அரசு பணத்தில் விளம்பரம் செய்கிறார்கள். மக்களை தந்திரமாக ஏமாற்றுவதில் முதல்வர் தந்திரமாக செல்படுகிறார். இதற்காக ரூ.600 கோடியை செலவு செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சிறப்பாக இருந்தது. விலைவாசி கட்டுக்குள் இருந்தது. ஏழை, எளிய மக்கள் பாதுகாப்பாக இருந்தனர். கல்வியில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், தற்போது கடன் வாங்குவதில் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக உள்ளது. தமிழகத்தில் 2021 வரை இருந்த மொத்த கடன் ரூ.5.38 லட்சம் கோடி. கடந்த 50 மாதங்களில் வாங்கிய கடன் ரூ.4.38 லட்சம் கோடி. இந்த ஆண்டு இன்னும் ரூ.1 லட்சம் கோடி கடன் வாங்கவுள்ளனர். 5 ஆண்டுகளில் ரூ.5.38 லட்சம் கோடி கடன் வாங்கி மக்கள் மீது கடன் சுமையை சுமத்திய அரசு தேவையா?
இந்த கடனை மக்கள் தான் கட்ட வேண்டும். கார் வாங்க, வீடு கட்ட கடன் வாங்கினால் கொடுத்தவர்கள் சும்மா விடுவார்களா? காரை பறிமுதல் செய்துவிடுவார்கள், வீட்டை சீல் வைத்துவிடுவார்கள். அதுபோல தான் அரசாங்கம் கடன் வாங்கினாலும் சும்மா விடமாட்டார்கள். நம் மீது வரி போட்டு தான் வசூலிப்பார்கள். எனவே, மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில் உடன்குடியில் ரூ.8000 கோடியில் அனல்மின் நிலையம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. அது தற்போது தான் முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது. அதுபோல, சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், ஆலந்தலை தூண்டில் வளைவு, காயல்பட்டினம், உடன்குடி பகுதி குடிநீர் திட்டங்கள், திருச்செந்தூர் யாத்ரி நிவாஸ் தங்கும் விடுதி, ரூ.400 கோடியில் திருச்செந்தூர் – பாளையங்கோட்டை சாலை போன்ற பல திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டவை. ஆனால் இவைகளை திமுக அரசு தற்போது ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறது.
எனவே, மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். வரும் 2026 தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். இந்த தேர்தலை மையமாக வைத்து தான் கருணாநிதி குடும்பம் இருந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் மூலமாக வாரிசு அரசியலுக்கு முன்னுரிமை கொடுக்க பார்க்கிறார்கள். வாரிசு அரசியலுக்கு, குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்போகிறது 2026 தேர்தல்.
ஸ்டாலின் மாடல் அரசு செய்த சாதனை தனது மகன் உதயநிதியை துணை முதல்வாராக்கியது தான். எனவே, மக்கள் சிந்தித்து 2026 தேர்தலில் வாக்களிக்க வேண்டும்” என்று பழனிசாமி பேசினார். தொடர்ந்து ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் எடப்பாடி கே.பழனிச்சாமி பேசினார். இந்த கூட்டங்களில் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.