மதுரை: பித்து பிடித்தாற்போல் வாய்க்கு வந்ததை போல பொய் மூட்டைகளை அமைச்சர் ரகுபதி அவிழ்த்து விடுகிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதே கொஞ்சம் கூட தெரியாமல், 4 ஆண்டுகள் இம்சை அரசன் புலிகேசி போல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார். அவரது அமைச்சரவையில் ஆஸ்தான கொத்தடிமை ரகுபதி, இத்தனை ஆண்டுகள் முட்டு கொடுத்து, கொடுத்து அதிமுக தொண்டனிடம் வாங்கிய தர்ம அடிகளுக்கெல்லாம் பரிசாக இப்போது தான் கனிமவளக் கொள்ளையடிக்க லைசன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா கை காட்டவில்லை என்றால், அதிமுக தொண்டன் வியர்வையும் ரத்தமும் சிந்தி உழைக்கவில்லை என்றால், இந்த ரகுபதி எங்கு இருந்திருப்பார்? அவருக்கே தெரிந்து இருக்காது. இவருக்கு அரசியல் வாழ்வளித்த அதிமுக தொண்டனின் உழைப்பை உறிஞ்சி, உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்யும் ஒட்டுண்ணியை விடக் கேவலமானவர்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது; பெண்கள் பாதுகாப்பு பாதாளத்தில் உள்ளது; போதைப்பொருள் புழக்கம் அமோகமாக உள்ளது. மொத்தத்தில் கும்பி எரியுது; குடல் கருகுது; குளு குளு ஊட்டி போட்டோஷூட் கேட்கிறதா? என்று கேட்கும் அளவிற்கு ஆட்சி நடத்தும் ஸ்டாலினிடம் தமிழகத்தின் சட்டம், ஒழுங்கு நிலை குறித்து அமைச்சர் ரகுபதி கேட்டு சொல்ல வேண்டும். பொள்ளாச்சி பாலியல் வழக்கில், நடுநிலையான விசாரணை வேண்டும் என்று வழக்கை சிபிஐ-க்கு மாற்றி உத்தரவிட்டார் அன்றைய முதலமைச்சர் கே.பழனிசாமி.
திமுக ஆட்சியில் நடந்த அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில், “ஞானசேகரனுக்கும் திமுகவுக்கும் சம்மந்தமே இல்லை” என்று பச்சைப்பொய் பேசியவர் தானே ரகுபதி? இந்த ரகுபதியின் பொய்யால், சட்டப்பேரவையில் ஸ்டாலினே, “ஞானசேகரன் திமுக கொத்தடிமை இல்லை. ஆனால் அனுதாபி” என உருட்ட வேண்டிய நிலைக்கு தானே தள்ளப்பட்டார்?
அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் எப்ஐஆர் லீக் ஆனதற்கு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 25 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க சொல்லி சென்னை உயர் நீதிமன்றம் சொல்லியது. ஸ்டாலின் அரசின் நடவடிக்கைகளை ஊரே சிரித்ததே, அதெல்லாம் இந்த ரகுபதிக்கு மறந்து போய்விட்டதா?.
கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை கைது செய்து, சார்ஜ் சீட் போட்டது அதிமுக அரசு. கேரளா குற்றவாளிகளுக்கு வாதாடி, ஜாமீன்தாரர் இருந்தது திமுகவினர
கொடநாடு வழக்கை சீக்கிரம் முடியுங்கள் என்று தானே கே.பழனிசாமி கூறி வருகிறார். நான்கு ஆண்டுகளாக கொடநாடு வழக்கை விசாரித்து முடிக்க முடியாத ஸ்டாலினின் கொத்தடிமை ரகுபதிக்கு இது ஏன் புரியவில்லை?
3 ஆண்டுகள் முக்கி முக்கி வராத நிதி, கே.பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசியதும் வந்துவிட்டது என்ற கடுப்பு இருக்கத் தானே செய்யும்? திமுக நடத்திய போராட்ட காமெடி நாடகத்தை நம்பி மத்திய அரசு நிதி கொடுத்தது என ஒட்டுண்ணி ரகுபதி சொல்வாரானால், அது செக்கில் ஆட்டிய சுத்தமான உருட்டு.
இப்படி தான், 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் மாளிகை முன் கோமாளி ஸ்டாலின் அவியல் கிண்டியதால் தான் வந்தது என்று ஒரு உருட்டு உருட்டினர் திமுக கொத்தடிமைகள். அந்த உருட்டை ஸ்டாலினின் பேரன் கூட நம்பமாட்டான்.
அஇஅதிமுக-வால் அரசியல் அடையாளம் பெற்று, அதிமுகவில் கொள்ளையடிப்பவர்களுக்கு இடம் இல்லை என்று தெரிந்ததும், கொள்ளையர்களின் கூடாரமான திமுகவுக்கு சென்று கொள்ளையிலே குளியல் போட்ட ரகுபதி உள்ளிட்ட ஊழல் பெருச்சாளிகள் வேண்டுமானால் ரெய்டுக்கெல்லாம் பயப்படலாம்.
மக்களோடு மக்களாக நின்று, மக்களுக்கான அரசியலை செய்யும் எங்கள் மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களுக்கு மடியில் கணமில்லை; வழியில் பயமில்லை.
நாங்கள் யாரும் ஒருபோதும் எந்த ரெய்டுக்கும் அஞ்சியதில்லை; அஞ்சப்போவதும் இல்லை! 1991-ல் எம்எல்ஏ ஆனபோது ரகுபதியின் சொத்து மதிப்பு என்ன? அதே ரகுபதியின் இன்றைய சொத்து மதிப்பு என்ன? எத்தனை கல்லூரிகள் வைத்துள்ளார்? இப்படி எண்ணிலடங்கா சொத்துகளை வாரிக் குவித்த ரகுபதி தான் “நாளை காலை ரெய்டு வந்துவிடுமோ?” என்ற பயத்திலேயே தினந்தோறும் இரவுகளைக் கழிக்க வேண்டும்.
அறிவாலயத்தில் மேலே ரெய்டுக்கு பயந்து, கீழே கட்சியை காங்கிரசுக்கு அடமானம் வைத்த கருணாநிதி குடும்பத்தின் கொத்தடிமைகள், மாநில உரிமைகள் பற்றிப் பாடமெடுக்க துளியும் தகுதியற்றவர்கள்.
எவ்வளவு மேக்கப் போட்டாலும், எத்தனை போட்டோஷூட் நடத்தினாலும் கோமாளி ஸ்டாலினால் இனி மக்களை ஏமாற்ற முடியாது; 2026-க்கு பிறகு சட்டையைக் கிழித்துக் கொண்டு ஸ்டாலினும், திமுகவும் பேக் டூ ஃபார்ம் உறுதி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.