மதுரை: விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகையை ரூ.800 கோடியை 10 நாட்களுக்குள் வழங்காவிட்டால் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணியை மதுரைக்குள் நுழைய விடாமல் கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.
மதுரையில் இன்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியது: “முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு, உச்ச நீதிமன்றத்தில் உறுதியான தீர்ப்பை பெற்று தமிழக உரிமையை மீட்டுள்ளனர். தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் அணை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இயலாத நிலையில் கேரள அரசால் அணைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
எனவே மத்திய தொழில் பாதுகாப்பு படையை பெற்று முல்லைப் பெரியாறு அணையை பாதுகாக்க தமிழக அரசு முன்வர வேண்டும். உலகத்தில் எந்த நாடும், இந்தியாவில் எந்த மாநிலமும் கொண்டு வராத சட்டத்தை தமிழக அரசு, ‘தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்-2023’ கொண்டு வந்து விளைநிலங்கள், ஏரிகள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை கார்ப்பரேட்டுகள் அபகரிக்க வழிவகுத்துள்ளனர். நிலம் தரமறுத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யும் நிலை உள்ளது. இதனை ரத்து செய்ய வேண்டும்.
தமிழக அரசு 50 ஆண்டுகளாக நேரடி நெல் கொள்முதல் செய்யும் நிலையில், தற்போது தனி நபருக்கு தாரை வார்த்துள்ளனர். விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நெல்லுக்குரிய தொகை ரூ.800 கோடியை 3 மாதமாக வழங்காததால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளனர். இதனால் நுகர்பொருள் வாணிபக் கழக இயக்குநர் சண்முகசுந்தரம் 20 நாள் கட்டாய விடுப்பில் சென்றுள்ளார். விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய உணவுத்துறை அமைச்சர் .சக்கரபாணி, ஊழல் முறைகேடு செய்த தனியார் நிறுவனத்தை பாதுகாக்கிறார்.
தனியார் கொள்முதல் செய்வதை கைவிட்டு, விவசாயிகளுக்குரிய 10 நாட்களுக்குள் வழங்க வேண்டும். தவறினால் மதுரை மண்டலத்துக்குள் நுழைய அமைச்சரை அனுமதிக்கமாட்டோம். அவருக்கு எதிராக கருப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்று அவர் கூறினார்.