புதுடெல்லி: அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, கடந்த 2006-11 திமுக ஆட்சியில் வீட்டுவசதித் துறை அமைச்சராக இருந்தார். அப்போது, வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடிக்கு சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக பெரியசாமி, அவரது மனைவி சுசீலா, மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்எல்ஏ, மற்றொரு மகன் ஐ.பி.பிரபு ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம், அவர்கள் 4 பேரையும் விடுவித்து உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் கடந்த 2018-ம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், அமைச்சர் உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து திண்டுக்கல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், இந்த வழக்கில் மீண்டும் குற்றச்சாட்டு பதிவு செய்து தினந்தோறும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தி, வழக்கை 6 மாதத்தில் முடிக்குமாறு, எம்.பி. எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் திண்டுக்கல் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டிருந்ததாவது: அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. லஞ்ச ஒழிப்புத் துறை ஆவணங்களில் சொத்துக் குவிப்பு புகாரை நிரூபிப்பதற்கான முகாந்திரம் இல்லை.
மனுதாரர் மற்றும் குடும்பத்தினரின் வருவாய் தவறாக கணக்கிடப்பட்டு இருப்பதை பரிசீலித்துதான் சிறப்பு நீதிமன்றம் அனைவரையும் விடுவித்தது. அந்த உத்தரவை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏற்புடையது அல்ல. மனுதாரருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநருக்கு பதிலாக, சட்டப்பேரவைத் தலைவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் அனுமதி பெற்றதும் சரியான நடைமுறை அல்ல. எனவே, வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வில் இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் வி.கிரி. முத்துகணேச பாண்டியன், மாளவிகா ஜெயந்த் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.இதையடுத்து, மறுவிசாரணை தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கவும் உத்தரவிட்டனர். ஏற்கெனவே வீட்டு மனை ஒதுக்கீடு தொடர்பாக ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீ்ட்டு மனுவுடன், இந்த வழக்கையும் சேர்த்து விசாரணையை தள்ளி
வைத்தனர்.