சென்னை: இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “இந்திய பொருட்களின் மீது அமெரிக்கா 50% இறக்குமதி வரி விதித்துள்ளது. இது தமிழகத்தில் ஏற்றுமதியை பாதித்துள்ளது. குறிப்பாக ஜவுளி மையமான திருப்பூரில் ரூ.3000 கோடி மதிப்பிலான ஏற்றுமதி பாதிக்கப்பட்டிருக்கிறது. பல்லாயிரக் கணக்கானோரின் வேலைவாய்ப்பு அபாயத்தில் உள்ளது. இந்தச் சூழலில் நமது தொழில்துறையை பாதுகாக்க உடனடி நிவாரணங்களை ஏற்படுத்தித் தருமாறு மத்திய அரசுக்கு வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 25 சதவீத கூடுதல் வரி விதிப்பு புதன்கிழமை (ஆக.27) அமலுக்கு வந்தது. ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியோடு இந்த கூடுதல் 25 சதவீதமும் சேர்ந்துள்ள நிலையில், 50 சதவீத வரி விதிப்பு இந்தியாவின் ஏற்றுமதியை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழிலாளர் சார்ந்த துறைகள் ஏற்றுமதி 70 சதவீதம் அளவுக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியப் பொருட்களின் மீதான அமெரிக்க வரி விதிப்பால் தமிழகத்தில் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு மத்திய அரசின் நடவடிக்கையை கோரியுள்ளார்.