சென்னை: அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரியால் ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து ஏற்றுமதி சார்ந்த தொழில்களை பாதுகாப்பதுடன் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் பெரும் அச்சத்தில் சிக்கியுள்ளன. கடந்த நிதியாண்டில், தமிழக பொருட்கள் 31 சதவீதம் அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டன. இந்த கடின சூழலில் மத்திய அரசின் பதில் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை. மத்திய அரசு தன் பங்கை உணர்ந்து, குறிப்பாக துணிநூல் துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்தியாவின் ஏற்றுமதித் துறைகளைப் பாதுகாக்க ஒற்றுமையான கொள்கை வடிவமைப்பை முன்வைக்க வேண்டும்.
தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனம் நடத்திய பகுப்பாய்வுப்படி, அமெரிக்காவின் 50 சதவீத சுங்கவரி விதிப்பால் மாநிலத்தின் கணிக்கப்பட்ட இழப்பு 3.93 பில்லியன் டாலராக இருக்கும். அதிகம் பாதிக்கப்படுபவை துணிநூல், இயந்திரங்கள், வைரம் மற்றும் நகைகள், வாகன உதிரி பாகங்கள் தொழில் துறைகளே. இந்தத் துறைகளில் வேலை இழப்பு 36 சதவீதம் வரை உயரும் என அஞ்சப்படுகிறது. துணிநூல் துறையின் சாத்தியமான இழப்பு 1.62 பில்லியன் டாலர் வரை இருக்கும்.
கடந்த ஆக.16-ல் உடனடி உதவி கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியிருந்தேன். அதில், சிறப்பு நிவாரணத் திட்டம், தலைகீழ் சுங்க வரி அமைப்பைத் திருத்துதல், 30 சதவீதம் வரை அடமானமற்ற கடன்கள் வட்டி மானியத்துடன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை முன்வைத்தேன்.
ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஆப்பிரிக்கா ஆகியவற்றுடனும் உறவுகளை ஆழப்படுத்த வேண்டும் என பிரதமரை வலியுறுத்தினேன். இதன் பயனாக, பருத்தி இறக்குமதியில் 11 சதவீத சுங்கவரியை டிச.31 வரை நிறுத்திய மத்திய அரசின் முடிவை நான் பாராட்டுகிறேன். அமெரிக்கா உயர்த்தியுள்ள சுங்கவரிகள் நீக்கப்படவில்லையெனில் அல்லது பிற சலுகைகளால் சமன்படுத்தப்படவில்லை என்றால், இந்த நிவாரணம் தற்காலிகமானதாகவே இருக்கும்.
ஆனால், தமிழகம் வெளிப்புற உதவிகளுக்காக காத்திருக்கவில்லை. எங்கள் அரசு அண்மையில் புதிய துணிநூல் சாயம் தோய்த்தல் அலகுகள் தொடர்பான மூலதன முதலீட்டு மானியத்தை அறிவித்துள்ளது. 2023-ல், நாங்கள் தொழில்நுட்பத் துணிநூல்களுக்கான சிறப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தினோம். செயற்கை நூலிழை உற்பத்தியை ஊக்குவித்தோம்.
இதைத் தொடர்ந்து, தொழில்நுட்ப துணிநூல் துறையில் தொழில்கள் நுழைய 2025-ல் தமிழ்நாடு தொழில்நுட்பத் துணிநூல் மிஷன் தொடங்கப்பட் டது. சுகாதாரம் முதல் உள்கட்டமைப்பு வரை பல துறைகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் துணி நூல்கள், ஒரு புதிய வாய்ப்பாகக் கருதப்படுகின்றன. சர்வதேச பேச்சுவார்த்தை, சுங்கவரிக் கொள்கை, பொருளாதார ஆதரவு போன்ற துறைகளில் மத்திய அரசின் முன்முயற்சிகளும் ஆதரவும் இன்றியமையாதவை.
தமிழகம் தனது ஏற்றுமதிகளைப் பாதுகாக்கவும், தனது தொழிலாளர்களை வேலை இழப்பிலிருந்து காப்பாற்றவும் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளது. மத்திய அரசு தீவிரமாகவும் ஒத்துழைப்புடனும் செயல்படும் என நம்புகிறேன்.
பாதிப்புகளின் விளைவுகளைக் கருதி, நெருக்கடியான இந்த நேரத்தில் மத்திய அரசு விரைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உடனடி நிவாரணம் வழங்கும் புதிய கொள்கைகளை உருவாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.