சென்னை/ திருப்பூர்: அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் அறிவிப்பு, நேற்று (ஆக.28) அதிகாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், நாடு முழுவதும் தொழில் துறை கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. ஜவுளித் தொழிலின் முக்கிய அங்கமாக இருக்கும் திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.
திருப்பூரில் ஏற்றுமதி சார்ந்த பின்னலாடை நிறுவனங்கள் அதிகம் உள்ளன. ஆண்டின் மொத்த ஏற்றுமதியில் 30 சதவீதம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது அமெரிக்காவுக்கு ஆண்டுக்கு 4 முறை, ஏற்றுமதி வர்த்தகம் சுழற்சி அடிப்படையில் நடைபெறுகிறது. ஒவ்வொரு 120 நாட்களுக்கும் ஒருமுறை சுழற்சி அடிப்படையில் ஆர்டர் பெறுவது, அனுப்பி வைப்பது என ஏற்றுமதி வர்த்தகம்நடந்து வருகிறது. அதன்படி திருப்பூரில் தற்போது அமெரிக்காவுக்கு அனுப்ப வேண்டிய ரூ.3,000 கோடி மதிப்பிலான வர்த்தகம் தேக்கம் அடைந்து பாதிப்புகளை சந்தித்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதி தொழில் துறையினர் கூறும்போது, “இந்தியா மீது அமெரிக்கா வர்த்தகப் போர் தொடுத்துள்ளது போன்ற சூழல் நிலவுகிறது. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் ஆர்டர்களை இழக்கும்போது, இயல்பாகவே தொழிலாளர்கள் வேலையை இழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது’’ என்றனர். இதற்கிடையே, அமெரிக்காவின்வரிவிதிப்பு நடவடிக்கையை கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஸ்டாலின் கடந்த 16-ம் தேதி கடிதம் எழுதினார்.
அமெரிக்காவின் வரிவிதிப்பால், ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல், நகைகள்ரத்தினக்கற்கள், தோல், காலணிகள், கடல்பொருட்கள், ரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடி நிவாரணம் வழங்கி, பணப் புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்க வரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டம் அறிமுகம், அதிக சுங்க வரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட, தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அந்த கடிதத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழகத்தின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது.
இந்த சூழலில், மத்திய அரசிடம் முன்வைத்த கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துகிறேன். உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் நமது தொழிற்சாலைகள் மற்றும் பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.
சென்செக்ஸ் 706 புள்ளிகள் சரிவு: அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய பொருட்களுக்கான 25% வரி இந்த மாத தொடக்கத்தில் அமலுக்கு வந்தது. இதையடுத்து, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் ஆகஸ்ட் 27-ம் தேதி முதல் கூடுதலாக 25% வரி விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தார். இதன்படி, கூடுதல் வரி விதிப்பும் அமலுக்கு வந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகள் கடந்த 26-ம் தேதி 1% அளவுக்கு சரிந்தது. 2-வதுநாளாக நேற்றும் பங்குச் சந்தையில் சரிவு நீடித்தது. நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் ‘சென்செக்ஸ்’ 706 புள்ளிகள் சரிந்து 80,080 புள்ளிகளில் நிலை பெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் ‘நிப்டி’ 211 புள்ளிகள் சரிந்து 24,501-ல் நிலை பெற்றது.